தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

7/26/2010

தெனாலி ராமன் கதைகள் 9

தெனாலி ராமன்


ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.
விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு
"இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது" என்றார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம்
இருக்கிறது" என்றார் தெனாலிராமன். ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை
உண்பதே தனி சுகம் தான்" என்றார்.

தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்"
என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம்
கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை.
அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.

அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவரை நோக் கி
ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார். "அப்பாடா! ராமா!
கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே" என்றார்.

தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.

6/06/2010

தெனாலிராமன் கதைகள் 8

குறைந்த விலைக்கு குதிரையை விற்றல்:

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.
பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.
தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

"சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான். அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான். பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான்.

அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே............ இது என்ன நியாயம்" என்றான்.
சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது. மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.

_________

6/03/2010

தெனாலிராமன் கதைகள் 7

ராஜகுருவை பழி வாங்குதல் :

ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.

குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான்.
தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு என்று கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான்.
ராமா........ என் துணிமணிகளைக் கொடுத்துவுடு. இன்னும் சிறிது நேரத்தில் நன்கு விடியப்போகிறது. இக்குளத்துக்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.
அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால் உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது என்று கூறி விட்டான்.என்னை அரண்மனை வரை உன் தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன், இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான்.

தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார். பின் துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராஜகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார். அதாவது தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்து என்முன் நிற்பாட்டுங்கள் என்று.
உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் ஐயா என்னை மன்னியுங்கள். ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்து செல்கிறேன் என்றான். அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள்மீது உட்கார்ந்து கொண்டான். தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். ராஜகுருவை நையப்புடைத்து மன்னர் முன் நிற்பாட்டினார்கள். இதைப் பார்த்த மன்னர் ராஜகுருவை ஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்கு காவலாட்கள் தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம் என்றனர்.

மன்னர் ராஜகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார். ராஜகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார்.தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச்சுவையுண்டு பண்ணினாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார்.

ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினார்கள். தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப்படுத்திவிட்டாய். மேலும் அவரை உதையும் வாங்க வைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே உன்னை சிரத்தேசம் செய்ய உத்தரவு இடுகிறேன் என்றார் மன்னர்.

இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினார். அவன் தன் இஷ்ட தேவதையான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான். காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர். இனி இவ்வூரில் இருக்காதே, வேறு எங்காவது போய்விடு என்று சொன்னார்கள். அவர்களிடம் அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான். காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம் தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம் என்று சொல்லி விடடனர். மன்னரும் இதை உண்மை என்று நம்பினார்.

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.

இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார். இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.
மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.
அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள். அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார். இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார். இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னல் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.
அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.

மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார். உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.

இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.

6/01/2010

தெனாலிராமன் கதைகள் 6

காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்:

அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.

அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர். இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார்.

அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன்.

இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார்.

இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள்.
அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள்.

பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி

5/27/2010

தெனாலிராமன் கதைகள்5

தெனாலிராமன் வரலாறு:

சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை. சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான். காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.

அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

5/23/2010

தெனாலிராமன் கதைகள்4

கிடைத்ததில் சம பங்கு:
ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான். நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.
வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை. இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான். ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.
ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.

5/08/2010

தெனாலிராமன் கதைகள் 3

சூடு பட்ட புரோகிதர்கள்:

மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார். தன் தாயாரிடம் சென்று "அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று கேட்டார். அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம் வாங்கி வர புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.
மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார். அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர். மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான். புரோகிதர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்" என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான். புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர். இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார். பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார்.

"மன்னாதி மன்னா..... என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே" என்றார். இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்" என்றான். முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே...... அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே......................"

அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.

4/28/2010

தெனாலிராமன் கதைகள் 2

குறைந்த விலைக்கு குதிரையை விற்றல்:
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான். பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.
தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

"சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான். அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான். பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான்.

அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே............ இது என்ன நியாயம்" என்றான்.
சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது. மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.

4/26/2010

தெனாலிராமன் கதை

பாத்திரங்கள் குட்டி போட்ட கதை:

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.

அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.

அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.

இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.

அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.

இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.

இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.

"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.

ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.
அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.

இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.
"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும் வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட். இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.
எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.

தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

4/20/2010

அக்பர் பீர்பால் கதைகள் 3

சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும்.

தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப் பொருட்படுத்தாமல் பல சமயங்களில் அவரைக் கிண்டல் செய்வதுண்டு. சிலசமயம் அவளுடைய கேலிப் பேச்சினால் கோபமடைந்தாலும், சக்கரவர்த்தி உடனே அவளிடம் சாந்தமாகி விடுவார் என்ற அனுபவம்தான் காரணம்!

ஒருநாள் மாலை நேரம், அக்பரும் பேகமும் அந்தப்புரத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். சாளரத்தின் வழியே வீசிய தென்றல் காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தது. அதை அக்பர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கிண்டல் செய்ய வேண்டுமென்று பேகத்திற்குத் தோன்றியது. “ஏது! மல்லிகை மணம் உங்களை மயக்குகிறதோ? என்னிடம் இல்லாதது மல்லிகையில் அப்படி என்ன இருக்கிறது?” என்று வாயைக் கிண்டினாள்.

“ஆம்! மல்லிகை மணம் என்னை மயக்குகிறது. அதிலுள்ள மயக்கம் உன்னிடம் இல்லை!” என்றார் திடீரென எரிச்சலுற்ற அக்பர். “என்னைத்தான் நேசிக்கிறீர்கள் என்று நினைத்தேன். என்னைவிட மல்லிகை மீதுதான் மோகமா?” என்று பேகம் மீண்டும் வம்புக்கிழுத்தாள்.

“ஆமாம்! உன் மீது மோகம் இருக்கவேண்டுமென்று என்ன அவசியம்?” என்றார் மேலும் கோபமுற்ற அக்பர்.

“மனைவி என்ற முறையில் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு!” என்று பதிலளித்தார் பேகம்.

“அந்த உரிமை யாருக்கும் கிடையாது. நான் மற்றவர்களைப் போல் சாதாரண மனிதனில்லை. ஏனெனில் நான் சக்கரவர்த்தி!” என்று உரக்க முழங்கினார் அக்பர்.

“என்ன? எனக்குக்கூட கிடையாதா? நான் என்ன சாதாரணப் பெண்ணா?” என்றார் பேகம். அக்பர் தான் கேலியாகக் கேட்டதில் கோபமடைந்து விட்டார் என்று உணர்ந்த அவளுடைய கண்கள் பனித்தன.

“அந்த ஸ்தானத்தை நீ இழக்கும் வேளை நெருங்கிவிட்டது!” என்று அக்பர் ஒரு குண்டைத் தூக்கிப் போட, அதை சற்றும் எதிர்பாராத பேகம் அழுதே விட்டாள். ஆனால், அவள் கண்ணிரைப் பொருட்படுத்தாத அக்பர், “என்னுடன் உனக்கான உறவு இன்றுடன் முடிந்தது. நீ உன் பிறந்தவீட்டுக்கு நாளைக்கே போய்விடு! உனக்குப் பிடித்த பொருள்களை நீ எடுத்துச் செல்லலாம்” என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி விட்டார்.

தன்னுடைய விளையாட்டு இப்படி வினையாகும் என்று சற்றும் எதிர்பாராத பேகம் துடிதுடித்துப் போனாள். ஏதோ கோபத்தில் கூறிவிட்டாரென்றும், விரைவில் அவர் கோபம் தணிந்து விடுமென்றும் தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ஆனால், அன்றிரவு அக்பர் அவளைத்தேடி அந்தப்புரத்திற்கு வரவேயில்லை. ‘ஐயோ, விஷயம் விபரீதமாகி விட்டதே!’ என்று பதைபதைத்துப் போன பேகம், மறுநாள் தன் தாதி மூலம் “நான் உங்களுடைய மனத்தை என் கேலிப்பேச்சினால் புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று கடிதம் எழுதிஅனுப்பினாள்.

ஆனால், அக்பர் “உங்கள் பேகத்தைப் பெட்டி, படுக்கைகளுடன் நாளையே கிளம்பச் சொல்!” என்று இரக்கமின்றி பதில் சொல்லி அனுப்பினார். அதைக்கேட்டு இடி விழுந்தது போலான பேகம், அளவற்ற கோபமடைந்தத் தன் கணவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று வழிதெரியாமல் தவித்தாள். கடைசியில் அவளுக்கு பீர்பால் ஞாபகம்வர, அவரை உடனே வரவழைத்தாள்.
உடனே பேகத்தைத் தேடிவந்த பீர்பால் அவள் முன்னிலையில் வணக்கம் தெரிவித்தபின் தன்னை அழைத்தக் காரணம் கேட்க, பேகம் கண்களில் நீர் தளும்ப நடந்த விஷயத்தைக் கூறியவுடன் “நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள்! உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்!” என்று பீர்பால் பேகத்திற்கு தைரியம் கூறிவிட்டு வீடு திரும்பினார்.

உடனே பீர்பாலின் யோசனைப்படி, தன் பொருள்களை எடுத்துப் பெட்டியில்வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். தன்னுடையது மட்டுமின்றி, அக்பரின்பொருள்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிறகு தன் தாதி மூலம்அக்பருக்கு, “பிரபு! நான் பிறந்த வீடு செல்லத் தயாராகி விட்டேன். ஆனால்,போவதற்கு முன் உங்களை ஒரேயோரு முறை சந்தித்து மன்னிப்புக் கோரவிரும்புகிறேன்” என்று செய்தி அனுப்பினாள்.

அதற்கு சம்மதித்த அக்பர், ஒரு மணி நேரம் சென்றபின் அந்தப்புரத்தை அடைந்தார். அவரை வாயிலில் நின்று புன்னகையுடன் வரவேற்ற பேகம் அவருக்கு இருக்கையளித்து உபசரித்தாள். ஆனால், அவளுடைய உபசரிப்பை அலட்சியம் செய்த அக்பர், கடுமையான குரலில் “நீ எப்போது போகப் போகிறாய் என்று மட்டும் சொல்!” என்றார். “இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், போவதற்கு முன், நான் இதுவரை உங்கள் மனத்தைப் புண்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னித்தேன் என்று உங்கள் வாயினால் கேட்ட பின்னரே, என்னால் நிம்மதியாகப் பிறந்த வீடு செல்ல முடியும்” என்று பேகம் உருகினாள்.

“சரி, மன்னித்து விட்டேன்! இப்போது புறப்படுகிறாயா?” என்று வேண்டா வெறுப்புடன் கூறிய அக்பர் எழுந்து செல்லத் தயாரானார். உடனே அவரை அமரச் சொன்ன பேகம், “தயவு செய்து நான் அன்புடன் அளிக்கும் இந்தப் பழச்சாறை அருந்துங்கள்” என்று ஒரு கோப்பையை நீட்டிய பின், “இதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் கடைசி பானம்!” என்று விம்மியழ, அக்பரும் சற்றே மனமிளகி, அந்தப் பழச்சாறைக் குடித்தார்.

குடித்த பிறகு பேகத்தை நோக்கி, “உனக்கு மிகவும் பிடித்தமான பொருள்கள் எதுவானாலும் நீ இங்கிருந்து எடுத்துச் செல்ல உனக்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டேன். நான் வருகிறேன்” என்று விறைப்புடன் அக்பர் கூற, பேகத்தின் இதழ்களில் ஒரு விஷமப் புன்னகை அரும்பியது. பிறகு, எழுந்து இருந்து செல்ல முற்பட்ட அக்பருக்கு திடீரென உடலை என்னவோ செய்ய, “எனக்கு ஒரே தூக்கமாக வருகிறது” என்று தள்ளாடினார்.

உடனே விரைந்து சென்று அவரைத் தாங்கிப் பிடித்த பேகம், “ஐயோ! ஏன் இப்படித் தடுமாறுகிறீர்கள்? சற்று நேரம் உட்கார்ந்து விட்டுச் செல்லுங்கள்” என்று அவரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் உட்காரச் செய்தாள். அடுத்தகணம் தன்னை அறியாமல் படுக்கையில் சாய்ந்த அக்பர், அப்படியே தூங்கி விட்டார்.

தான் பழச்சாறில் கலந்த மருந்து வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்த பேகம், உடனே தன் கைகளைத் தட்டி சில காவலர்களை அழைத்து, அக்பரை படுக்கையோடு சேர்த்து எடுத்துச் சென்று பல்லக்கில் வைக்கும்படி உத்தரவிட்டாள். அப்படியே அவர்கள் செய்ய, உடனே பேகம் தங்கள் இருவரது உடைமைகளையும் மற்றொரு பல்லக்கில் ஏற்றித் தானும் ஏறிக்கொள்ள, உடனே இரண்டு பல்லக்குகளும் ஆள்களால் சுமக்கப்பட்டு, பேகத்தின் பிறந்த வீட்டை அடைந்தன.

தன் வீட்டையடைந்ததும், பேகம் அங்கிருந்த பணியாட்களுக்கு இட்டக் கட்டளையின்படி, அவர்கள் அக்பரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு வந்து படுக்கையறையில் கிடத்தினார்கள்.

“ஐயோ! ஏன் இப்படி சக்கரவர்த்தியை தூக்கி வருகின்றனர்? அவருக்கு உடல் சரியில்லையா?” என்று பேகத்தின் பெற்றோர் பதறிப்போக, “ஒன்றுமில்லை. கடந்த சிலநாள்களாக இருந்த மிக அதிகமான வேலையினால், பல்லக்கில் வரும்போது தூங்கிக் கொண்டே வந்தார். உண்மையில் ஒரு நாள் ஒய்வு எடுக்கவே அவர் இங்கு வந்துள்ளார்” என்று பேகம் பதிலளித்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து கண்களைத் திறந்த அக்பர், பேகத்தை நோக்கி, “நான் எங்கிருக்கிறேன்?” என்று கேட்டார். “நீங்கள் என் பிறந்த வீட்டில்தான் இருக்கிறீர்கள்” என்று பேகம் புன்னகையுடன் கூற, அக்பருக்கு சுரீர் என்று கோபம் தலைக்கேறியது.

“நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை இங்கு தூக்கி வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று அவர் சீறினார்.

“நீங்கள் தான் பிரபு!” என்று அவர் சீறினார்.

“என்ன உளறுகிறாய்? நான் எப்போது அனுமதி தந்தேன்?” என்று அக்பர் கேட்க, அதற்கு பேகம், “உனக்குப் பிடித்த பொருள் எதுவானாலும் நீ இங்கிருந்து அதை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்ததே நீங்கள்தான்! எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த பொருள் நீங்கள்தான்! அதனால் உங்களை என்னுடன் எடுத்து வந்ததில் என்ன தவறு?” என்று சாமர்த்தியமாக மடக்கினாள்.

“ஓ!” என்ற அக்பர் திடீரென வாய்விட்டு சிரித்தார். “நீ மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு இருக்கிறாய். சரி வா! நாம் நம் அரண்மனைக்குப் போவோம்!” என்ற அக்பர், தொடர்ந்து, “அதிருக்கட்டும்! உனக்கு இந்த அபாரமான யோசனையை சொல்லிக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்.

அதற்கு பேகம் “நீங்கள்தான் மிகவும் புத்திசாலியாயிற்றே! கண்டுபிடியுங்களேன்!” என்றாள் .

“அது நிச்சயம் பீர்பாலாகத் தானிருக்கும்” என்றார் அக்பர்.

4/04/2010

அக்பர் பீர்பால் கதைகள் 2


கிணற்றுக்குள் வைர மோதிரம்!

அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின. நண்பகலில் தெருக்கள் வெறிச்சோடிப் போயின. வெயிலுக்கு பயந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார். அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், "தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

"இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை" என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், "பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்," என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.

"பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

"பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?" என்று பீர்பால் கேட்க, "வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்" என்றார் அக்பர். "ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?" என்று பீர்பால் கேட்டார்.

"அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து விட்டால் போகிறது!" என்ற அக்பர் தொடர்ந்து, "கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

"பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!" என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, "அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?" என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.

பீர்பால் ஒரு நீலை எடுத்து அதன் ஒரு முனையில் கல் ஒன்றக் கட்டினார். அந்தக் கல்லை கிணற்றுக்கடியில் இருந்த ஈரமான சானத்தில் நன்றாக முக்கினார். நூலின் மறுமுனையை திணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். சானத்துடன் இருந்த கல்லை கிணற்றுக்குள்ளிருந்த வைரக்கல் மீது குறிபார்த்து எரிந்தார். அந்த கல் வைர மோதிரத்தின் மீது நன்றாக ஒட்டிக் கொண்டது.

அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் மோதிரமும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது. பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், "பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்" என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?" என்று அக்பர் ஆவலுடன் கேட்க "மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்" என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார். "பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!" என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.
/*/*/*/*/*

3/14/2010

அக்பர் பீர்பால் கதைகள்

காளைமாட்டின் பால்
சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதைக்கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர்.

ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர்.

“வழியை விடுங்கள்! சக்ரவர்த்திக்கு உடல் சரியில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும்” என்றார் ஜாலிம்கான்.
“நீங்கள் சக்ரவர்த்தியைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதால் தான் உங்களிடம் அவசரமாக வந்துஇருக்கிறோம்” என்ற அவர்கள், “பீர்பாலைக் காலை வாரிவிட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றனர்.

“பீர்பாலை படுகுழியில் தள்ள நான் எது வேண்டுமானாலும் செய்யத்தயார்! உடனே சொல்லுங்கள்!” என்றார் ஜாலிம்கான்.
வயதான ஒருவர் ஜாலிம்கானின் காதில் தங்களுடைய ரகசியத் திட்டத்தைக் கூறினார். அதைக்கேட்டதும் ஜாலிம்கான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். தனக்கு யோசனை கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின், அக்பருக்கு சிகிச்சையளிக்கச் சென்றார். அக்பர் தனது படுக்கை அறையில் தலை வரை கம்பளியினால் போர்த்திக் கொண்டு முனகிக் கொண்டிருந்தார்.

'ஜாலிம்கான் அக்பரை கவனமாக சோதித்தார். அவருக்கு ஏற்பட்டு இருப்பது சாதாரண காய்ச்சல்தான் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் வெகு நேரம் அக்பரை சோதித்துப் பார்த்தபின், மிகவும் கவலைப்படுவது போல் சற்று நேரம் பாசாங்கு செய்தார். அதன் பிறகு அவர் அக்பரிடம், “பிரபு! உங்களுக்கு வந்திருப்பது விஷக்காய்ச்சல்! அதற்கு மருந்து என்னிடம் இருக்கிறது. ஆனால் காளை மாட்டின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால்தான் விரைவில் குணம் அடைவீர்கள் அதனால் தான் கவலைப்படுகிறேன்” என்றார்

“காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்டார் அக்பர்.
“பால் தரும் காளை மாடுகளும் இருக்கின்றன பிரபு! ஆனால் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்” என்றார் ஜாலிம்கான். “யார் அதைக் கண்டு பிடிப்பது?” என்று அக்பர் கவலையுடன் கேட்க, “ஏன் பிரபு? நமது பீர்பால் மிகவும் புத்திசாலி! அவரால் முடியாத காரியமே எதுவும் இல்லை”என்றார் ஜாலிம்கான்.

“பீர்பாலால் பால் தரும் காளை மாட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும்?” என்று அக்பர் சந்தேகத்துடன் ஜாலிம்கானிடம் கேட்டார். “அத்தகைய காளை மாட்டை இந்த உலகில் யாராவது ஒருத்தரால் கண்டு பிடிக்க முடியும் எனில் அது பீர்பால் மட்டுமே!” என்று கூறிய வைத்தியர், “பிரபு! நீங்கள் ஒரு வாரம் ஓய்வெடுங்கள். இந்த மருந்தை ஒரு நாளைக்கு நான்கு முறை காளை மாட்டுப் பாலில் கலக்கிச் சாப்பிடுங்கள். நீங்கள் குணமாகிவிடுவீர்கள்” என்று சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்து விட்டு சென்றார் ஜாலிம்கான்.

உடனே, பீர்பால் அக்பர் முன் வரவழைக்கப்பட்டார். “எப்படிஇருக்கிறீர்கள், பிரபு?” என்று பீர்பால் கேட்க, “நீதான் பார்க்கிறாயே பீர்பால்! எனக்குக் கடுமையான காய்ச்சல்! வைத்தியர் மருந்து தந்திருக்கிறார். ஆனால் அதைக் காளை மாட்டுப் பாலில் குழைத்து சாப்பிட வேண்டுமாம்,” என்றார் அக்பர். “காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்ட பீர்பால், “காளை மாடு பால்தரும் என்று எந்த மடையன் சொன்னான்?” என்று கேட்டார்.

“ஏன்? வைத்தியர் ஜாலிம்கான் சொன்னார்! அதுவும் உன் ஒருவனால்தான் காளை மாட்டின் பால் கொண்டுவரமுடியும் என்பதையும் உறுதியாகச் சொன்னார்” என்றார் அக்பர். “அப்படியென்று ஜாலிம்கான் சொன்னாரா?” என்று பீர்பால் கேட்டார். “ஆம்!” என்றார் அக்பர்.

தன்னை சிக்கலில் ஆழ்த்தி அவமானப்பட வைக்க ஜாலிம்கான் செய்த சூழ்ச்சி என்று பீர்பாலுக்கு உடனே தெரிந்து விட்டது. பீர்பால் வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு சென்றார். விரைவிலேயே அவர் மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியது. உடனே, வீட்டுக்குச் சென்ற பீர்பால் புத்திசாலியான தன் மகளை அழைத்து அரண்மனையில் நடந்ததைக் கூறி, சிக்கலிலிருந்துத் தப்பிக்கத் தான் யோசனை செய்துள்ள திட்டத்தையும் கூறினார்.

அதைக் கேட்ட அவரது மகள் “கட்டாயம் செய்கிறேன் அப்பா!” என்றவள் “அந்த ஜாலிம்கானுக்கு உங்கள் மீது பொறாமையா?” என்று கேட்க, “அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்குப் பொறாமை! இருக்கட்டும்! நீ நான் சொன்னபடி இன்றிரவே செய்!” என்றார் பிர்பால்.

நடு இரவும் வந்தது. பீர்பாலின் மகள் ஒரு வேலைக்காரியை உடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள். அக்பருடைய அரண்மனைக்கருகே உள்ள படித்துறையைத் தேர்ந்தெடுத்த அவள், தன்னுடன் கொண்டு வந்திருந்த துணிகளை ஆற்றில் அலசித் துவைக்கத் தொடங்கினாள். அக்பரின் படுக்கை அறைக்கு மிக சமீபத்தில் அந்தப் படித்துறை இருந்ததால், பீர்பாலின் மகள் ஓங்கி ஓங்கித் துணிகளை படியில் அடித்த சத்தம் நடுநிசி வேளையில் மிகவும் உரக்கக் கேட்டது. அது போதாதென்று, வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துக்கொண்டே பேசினாள்.

அந்த சத்தத்தில் அக்பரின் தூக்கம் கலைந்து போயிற்று. நடு இரவில் யார் இப்படி சத்தம் போடுவது என்று கோபமுற்ற அக்பர் உடனே ஒரு காவற்காரனை அனுப்பினார். காவற்காரனும் யார் அவ்வாறு சத்தம் போடுவது என்றறிய அரண்மனையை விட்டு வெளியே வந்தான். ஆற்றங்கரையில், நடு இரவில், ஓர் இளம்பெண் வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும், துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டுஇருந்ததையும் பார்த்து கோபமுற்றான்.

அவன் அவளைத் திட்டிக் கொண்டே நெருங்கி, “முட்டாளே, நீ என்ன பைத்தியமா? இரவு நேரத்தில் யாராவது துணி துவைப்பார்களா?” என்று தன் ஈட்டியை ஆட்டிக் கொண்டே கேட்டான்.

“ஏன்? இரவு நேரத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதா? பகலில்தான் இருக்குமா? இரவில் ஏன் துவைக்கக் கூடாது?” என்று பீர்பாலின் மகள் வாதம் செய்தாள். “உனக்கு அறிவில்லையா? பக்கத்தில் சக்ரவத்தியின் மாளிகை இருக்கிறது. பாவம், உன்னால் அவர் தூக்கம் கலைந்து விட்டது. நீ உடனே இங்கிருந்து போய்விடு” என்றான் காவலன்.

'அப்புறம் துணிகளை யார் துவைப்பது? நீ செய்வாயா?” என்றாள் அவள். காவலன் கோபத்துடன், “அதிகப்பிரசங்கி! யார் நீ?” என்று கத்தினான். உடனே, அவள் சிரித்துக் கொண்டே “நான் ஒரு பெண்!” என்றாள். “திமிர் பிடித்தவளே! நீ யாருடைய பெண்?” என்றான் காவலன். “நான் என் அப்பாவுடைய பெண்!” என்று இடக்காக அவள் பதில் சொல்ல, காவலன் பொறுமையிழந்தான்.

“உன்னை சக்ரவத்தியிடம் இழுத்துப் போகிறேன். இதேபோல் அங்க பதிலளித்தால், அவர் உனக்கு சவுக்கடி கொடுப்பார்” என்று காவலன் அவளை இழுத்துக் கொண்டு அக்பரிடம் சென்றான். அக்பரின் முன் நிறுத்தப்பட்ட பீர்பாலின் மகளின் முகத்தில் பயம் துளிக்கூட இல்லை. புன்சிரிப்புடன் தைரியமாக அவள் நிற்க, காவலன் அவள் இரவில் துணி துவைப்பதைப் பற்றி அக்பரிடம் கூறினான். அக்பர் கோபத்துடன் “என்னம்மா? இரவில்தான் துணி துவைக்க நேரம் கிடைத்ததா? என்றார். “ஆமாம் பிரபு! பகலில் நேரம் கிடைக்கவில்லை. இன்று மாலைதான் என் அப்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்தது. இருவருக்கும் வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு, துணிகளை துவைக்க இப்போது வந்தேன்” என்றாள் அவள்.

“என்ன உளறுகிறாய்?” என்றார் அக்பர் கோபத்துடன். “நான் உளறவில்லை பிரபு! உண்மையைத்தான் சொல்கிறேன். இன்று மாலைதான் என் அப்பாவுக்குக் குழந்தை பிறந்தது” என்றாள் அவள். “முட்டாளே! மறுபடியும் பைத்தியம் போல் உளறாதே! உன் அம்மாவுக்குக் குழந்தை பிறந்தது என்று சரியாகச் சொல்!” என்று சீறினார் அக்பர். “இல்லை பிரபு! என் அப்பாவுக்குத்தான் குழந்தை பிறந்தது” என்று தான் சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள் அவள். “உனக்கு என்ன பைத்தியமா? உன் அப்பாவுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?” என்று எரிமலை போல் அக்பர் வெடித்தார்.

“இதில் கோபப்பட என்ன இருக்கிறது பிரபு? காளை மாடு பால் கொடுக்க முடியும் என்றால், ஓர் ஆணினால் குழந்தையைப் பெற முடியாதா?” என்று அவள் கேட்டவுடன், அக்பருக்கு ‘சுரீர்’ என்று உறைத்தது. உடனே, அவருக்கு விளங்கிவிட்டது. அவர் கோபம் எல்லாம் குறைந்து விட்டது

“பெண்ணே! நீ பீர்பாலின் மகளா?” என்று அக்பர் கேட்டார். “ஆம், பிரபு!” என்றாள்.
“பீர்பாலைத் தவிர வேறு யாருக்கு இப்படியெல்லாம் யோசனை தோன்றும்... பெண்ணே! பீர்பாலை வீணாக காளை மாட்டின் பாலைத் தேடி அலையவேண்டாம் என்று சொல்! அதை நீயே கொடுத்து விட்டதாக சொல்!” என்ற அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பை ஒன்றை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவள் அவரை வணங்கி விட்டு வீடு சென்றாள்.

அவள் சென்றபின் அக்பர் தனக்குத்தானே நினைத்தக் கொண்டார். “சே! இந்த ஜாலிம்கான் பீர்பாலை சிக்க வைக்க வேண்டும் என்றே காளை மாட்டின் பால் கொண்டு வரச் செல்லி என்னையும் முட்டாள் ஆக்கி விட்டான்” ஒரு பொண்ணின் முன்னால் மூக்கு உடைபட்டது தான் மிச்சம்” என்று எண்ணிய அக்பருக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது.

மறுநாள் ஜாலிம்கான் வாழ்நாளில் கேட்டிராத வார்த்தைகளால் அக்பரிடம் திட்டு வாங்கினார்.
***************

3/01/2010

மரியாதை ராமன் கதைகள்!ராமனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ராமன் சோமனிடம் வந்தான்.

"சோமா, நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உன்னுடைய தங்க மோதிரத்தை ஒரு நாள் இரவல் கொடுத்தால் கல்யாணத்திற்குப் போய் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றான் ராமன்.

சோமனும் தன் கையிலிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி ரங்கனிடம் கொடுத்தான்.

மோதிரம் வாங்கிச் சென்ற ரங்கன் வெகுநாளாகியும் திரும்பி வரவில்லை. சோமன் அவன் வீட்டுக்குச் சென்றான்.

"என்ன ராமா! என்னிடமிருந்து தங்க மோதிரம் இரவலாக வாங்கிப் போனாயே, அதை இன்னும் திருப்பித் தரவில்லையே!" என்றான் சோமன்.

"தங்க மோதிரமா? நான் வைத்திருப்பது எனது மோதிரம் தான். உன்னிடம் இருந்து ஒன்றும் வாங்கவில்லையே!" என்று ஒரு போடு போட்டான் ராமன்.

அவன் விரலில் அணிந்திருந்தது சோமனின் மோதிரம். ஆனால் ராமனோ அது தன்னுடையது என்றான்.

சோமன் நேராக மரியாதை ராமனிடம் சென்று ராமன் தனது மோதிரத்தை வாங்கிகொண்டு ஏமாற்றி விட்டான் என்று முறையிட்டான்.

மரியாதைராமன் ராமனை அழைத்து விசாரித்தான். ராமனோ "ஐயா சோமன் பொய் சொல்கிறான். நான் இவனிடம் மோதிரம் வாங்கவில்லை. என் விரலில் இருப்பத்து என் மோதிரம் தான்" என்றான்.

இதைக் கேட்ட மரியாதை ராமன் "நீங்கள் இருவரும் சொல்வதிலிருந்து உண்மையாகவே மோதிரம் யாருக்கு சொந்தம் என்பது தெரியவில்லை. அதனால் நாளை ஒரு தங்கத்தை மதிப்பீடு செய்பவரை வரச்சொல்லி மோதிரத்தை உரசிப்பார்ப்போம். அவர் என்ன மதிப்பு சொல்கிறாரோ, அந்த மதிப்பிற்கு அதை விற்று அந்த பணத்தை இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்து விடுகிறேன். இருவரும் சென்று நாளை வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

மறுநாள் ஒரு பொற்கொல்லர் சபைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் மோதிரம் கொடுக்கப்பட்டது.

அவர் அதை உரைக்கல்லில் வைத்துத் தேய்த்தார். நிறுத்தாமல் அதிக நேரம் தேய்த்துக் கொண்டே இருந்தார். இதைப் பார்த்த சோமன் "ஐயா என் மோதிரத்தை இப்படியே தேய்த்து கரைத்து விடுவாய் போலிருக்கிறதே!" என்று கதறினான்.

ராமனோ பேசாமல் இருந்தான். பின்னர் பொற்கொல்லர் தேய்த்து முடித்து மோதிரத்தின் மதிப்பை மிகக் குறைவாக விலை சொன்னார். அந்த விலையைக் கேட்டதும் சோமன் கோபமுற்றான்.

"என்ன அநியாயம் இது! நான் வாங்கிய விலையில் கால்பங்கு கூட இல்லையே! இது தானா நீங்கள் போடும் மதிப்பு?" என்று கூச்சலிட்டான்.

இதைக்கேட்ட மரியாதைராமன், ராமனைப் பார்த்து "உண்மையாகவே இது உன்னுடைய மோதிரமாக இருந்தால் இந்நேரம் நீ பேசாமல் இருந்திருக்க மாட்டாய், உண்மையை வரவழைப்பதற்க்காக நான் தான் அதிகமாக உரைக்கச் சொல்லியும், மதிப்பைக் குறைத்தும் சொல்லச் சொன்னேன். இப்போது மோதிரத்திற்கு உரியவர் யார் என்பது தெரிந்து விட்டது." என்று சொல்லி மோதிரத்தை சோமனிடம் ஒப்படைத்தார்.

சோமனை ஏமாற்றிய குற்றத்திற்காக ராமனுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினான்.

மரியாதை ராமனின் சமயோஜிதமான நடவடிக்கையைப் பார்த்து மக்கள் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

2/26/2010

யோகிராஜ் வேதாந்திர மகரிஷியின் பொன்மொழிகள்!


முன்னோர்களால் சொல்லப்பட்ட சம்பிரதாயங்கள் பலவும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளவை.

உதாரணமாக அமாவாசை அன்று சூரியன், சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால், பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும்.

அமாவாசை நாட்களில் ஏன் தர்பணம் செய்ய வேண்டுமென்றால், பூமியின் ஆகர்ஷண சக்தி அந்நாட்களில் அதிகரிக்கும். நம் ஒவ்வொருவரிடத்தும் இறந்து விட்ட பெரியவர்களின் ஆற்றல் உள்ளடங்கியிருப்பதால், அந்நாட்களில் அவர்களை நினைக்கவும், நம் சக்தியை வீணாகச் செலவிடாது இருக்கவும் அந்நாளை நினைவு நாளாக வைத்து, பெரியவர்களுக்குத் தர்பணம் செய்யும் விரத நாளாகவும் வைத்தார்கள்.

அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாகும்.
மூளை நோய் உள்ளவர்களைக் கட்டி வைக்க வேண்டிய அளவுக்கு வெறி அதிகப்படும். மரணத்தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரிந்து விடும்.

அந்த நாளைச் சிற்றின்பத்திற்குச் செலவு செய்வதோ, குழந்தைப் பேறு உண்டாவதோ நன்மையாக அமையாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை உருவாகக் கூடும். ஏனெனில் நிலவு பூரணமாக ஒளி அற்ற நாளாகும் அது.

(அதனால் தான் அமாவாசை விரதம் என்று குறைவாக உண்பார்கள். மூக்குப் பிடிக்க சாப்பிட்டால் ஏதாவது செய்வோம் என்று உடம்பு தினவெடுக்கும். சிற்றின்பத் தூண்டுதல் உண்டாகும். அதைத் தவிர்க்கவே அமாவாசை விரதம் என்று குறைவாக உணவு உண்ணுதை வழக்கமாகக் கொண்டார்கள் என்பது புரிகிறதா?)

அதே போல் முழு நிலவு நாள் அன்று பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் வருகிறது. அந்நாள் தான் பௌர்ணமி. அந்நாளிலும் மனித உடல் அதிகமான சக்தி வந்து விந்து நாதத்தில் ஒரு பூரிப்பை ஏற்படுத்துகிறது.

அந்நாளில் ஒரு குழந்தை உண்டானாலும் மனவளர்ச்சி இல்லாத குழந்தையாக அது உருவாகக் கூடும்.

எனவே அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களைப் புனிதமான நாட்களாகவும், விரத நாட்களாகவும் மனதில் கொண்டு மதித்து இறைவனிடம் மனதைச் செலுத்தச் சொன்னார்கள்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com