தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

2/26/2010

யோகிராஜ் வேதாந்திர மகரிஷியின் பொன்மொழிகள்!


முன்னோர்களால் சொல்லப்பட்ட சம்பிரதாயங்கள் பலவும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளவை.

உதாரணமாக அமாவாசை அன்று சூரியன், சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால், பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும்.

அமாவாசை நாட்களில் ஏன் தர்பணம் செய்ய வேண்டுமென்றால், பூமியின் ஆகர்ஷண சக்தி அந்நாட்களில் அதிகரிக்கும். நம் ஒவ்வொருவரிடத்தும் இறந்து விட்ட பெரியவர்களின் ஆற்றல் உள்ளடங்கியிருப்பதால், அந்நாட்களில் அவர்களை நினைக்கவும், நம் சக்தியை வீணாகச் செலவிடாது இருக்கவும் அந்நாளை நினைவு நாளாக வைத்து, பெரியவர்களுக்குத் தர்பணம் செய்யும் விரத நாளாகவும் வைத்தார்கள்.

அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாகும்.
மூளை நோய் உள்ளவர்களைக் கட்டி வைக்க வேண்டிய அளவுக்கு வெறி அதிகப்படும். மரணத்தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரிந்து விடும்.

அந்த நாளைச் சிற்றின்பத்திற்குச் செலவு செய்வதோ, குழந்தைப் பேறு உண்டாவதோ நன்மையாக அமையாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை உருவாகக் கூடும். ஏனெனில் நிலவு பூரணமாக ஒளி அற்ற நாளாகும் அது.

(அதனால் தான் அமாவாசை விரதம் என்று குறைவாக உண்பார்கள். மூக்குப் பிடிக்க சாப்பிட்டால் ஏதாவது செய்வோம் என்று உடம்பு தினவெடுக்கும். சிற்றின்பத் தூண்டுதல் உண்டாகும். அதைத் தவிர்க்கவே அமாவாசை விரதம் என்று குறைவாக உணவு உண்ணுதை வழக்கமாகக் கொண்டார்கள் என்பது புரிகிறதா?)

அதே போல் முழு நிலவு நாள் அன்று பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் வருகிறது. அந்நாள் தான் பௌர்ணமி. அந்நாளிலும் மனித உடல் அதிகமான சக்தி வந்து விந்து நாதத்தில் ஒரு பூரிப்பை ஏற்படுத்துகிறது.

அந்நாளில் ஒரு குழந்தை உண்டானாலும் மனவளர்ச்சி இல்லாத குழந்தையாக அது உருவாகக் கூடும்.

எனவே அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களைப் புனிதமான நாட்களாகவும், விரத நாட்களாகவும் மனதில் கொண்டு மதித்து இறைவனிடம் மனதைச் செலுத்தச் சொன்னார்கள்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

2/19/2010

மரணத்திற்கு அப்பால் - 3


"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆத்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்.

ஒரு வழியாக மூன்று மணிக்கு கோவிலின் கதவு திறந்தது. குருவாயூரப்பனின் தரிசனத்தை அதிகாலை பார்த்தோம். நாங்கள் கோவிலை விட்டு வெளியே கூட்டத்தைப் பார்த்தால் கிட்டத்தட்ட இரு கிலோமீட்டருக்கான மக்கள் ஒரே தெருவில் மூன்று வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். நல்ல வேளையாக ஒரு மணிக்கு வரிசையில் நின்றதால் அதிகாலை தரிசனம் கிடைத்து ஊருக்கு கிளம்ப முடிந்தது. இல்லையேல் ஒரு நாள் முழுவதும் வீணாகியிருக்கலாம். எல்லாம் ட்ரில் மாஸ்டர் போல எங்களை விரட்டி விரட்டி வழிநடத்திய குருசாமி உபயம்.

ஒரு வழியாக வண்டி கிளம்பியது. அப்போது கண் மூடியவன் தான். பிறகு உடன் வந்தவர்கள் வழியெல்லாம் கோவில்களில் நிறுத்தி ஒரே பக்தி ரசத்தைப் புழிந்தார்கள். என்னால் அதற்கு மேல் கண்முழிக்க முடியவில்லை. நன்றாக உறங்கிவிட்டேன்.

மாலை ரயில் ஏறும் உற்சவம் நடந்தது. கேரளத்திற்கு பிரியாவிடை கொடுத்து பயணிக்கத் துவங்கினோம். வண்டியில் அருகே உட்கார்ந்திருந்த குருசாமியிடம் என் ஆத்மாவை அறியும் தாகத்தை தணிக்க மீண்டும் பேசத் துவங்கினேன்.

நல்ல மனிதர் சலித்துக் கொள்ளாமல் அவரும் பேசத்துவங்கினார்.

"உபநிஷத்துக்கள் எல்லாமே "ஆத்மா" என்ற உண்மைப் பொருளை பற்றி அறியும் வழியை ஒவ்வொரு கோணத்தில் எடுத்துச் சொல்வதாகவே இருக்கிறது. எளிதாகச் சொன்னால் இது ஒரு "self realisation".

நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா"

இதைத் தான் ஒற்றை வாக்கியமாக "தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆத்மா) என்று சொல்லுவார்கள்.

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்."

"சரி இதை நசிகேதஸ் எந்த வகையில் தெர்நிது கொள்கிறான்" என்றேன்.

"நசிகேதஸ் ஒரு சிறுவன் தான். ஆனால் அவனுக்குள்ளே ஞானத்தைப் பற்றிய கேள்விகளும் விடை காண வேண்டும் என்ற பிடிவாதமும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. முக்கியமாக வைராக்கியம் இருப்பவனே அதை அடைவான் என்பதற்கு நசிகேதனே உதாரணம்."

"கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்" என்றேன்.

"முழுசா சொல்றேன் கேளு" என்று சொல்லத்துவங்கினார்.

ஒரு காலத்தில் வாஜ்ரவஸ் என்ற அரசன் இருந்தான். அவன் நற்பலன்கள் அடையவேண்டும் என்பதைக் கருதி ஒரு பெரிய யாகம் ஒன்றை நடத்தி வந்தான். யாக குண்டத்தில் அக்னி வளர்த்து உயர்ந்த பொருட்களையெல்லாம் அக்னியில் இட்டு இறைவனுக்கு அற்பனிப்பதாக சொல்லப்படுவதே யாகம்.

வாஜ்ரவஸ் இந்த உலகத்தையே ஆள வேண்டும். உலகில் உள்ள எல்லாப் பொருளும் தனக்கே உரியதாக வேண்டும் என்ற வேண்டுதலின் பேரில் விசுவஜித் என்ற யாகத்தை செய்தான். இந்த யாகத்தின் நிபந்தனை என்னவென்றால் தன்னிடமிருக்கும் எல்லாவற்றையுமே தானமாக கொடுக்க வேண்டும். எதையும் மிச்சம் வைக்கக் கூடாது.

எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் எல்லாம் கிடைக்கும் என்பது யாகத்தின் நோக்கம். ஆக அரசன் தன்னிடம் இருக்கும் பொன், பொருள் பசுக்கள், குதிரைகள் என்று யாவற்றையும் தானம் கொடுக்கத் துவங்கினான்.

இவற்றை வாஜ்ரவஸின் மகனான நசிகேதன் அருகிலே இருந்து பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு யாகங்களை அதன் தர்மம் மீறாமல் செய்ய வேண்டும் என்பதில் பிடிப்பு இருந்தது.

ஆனால் அரசனோ பால் சுறக்காத வயதான மாடுகளையும், கிழட்டு குதிரைகளையும் உதவாத பொருட்களையும் மட்டுமே தானமாக கொடுத்துக் கொண்டிருந்தான். இது யாகத்திற்கு விரோதமானது. தானமாக கொடுக்கும் பொருள் எதுவாகிலும் அது தானம் பெறுபவர்களுக்கு உபயோகப்பட்டால் தான் தானத்திற்கு பயன்.

அதனால் ஒன்றுக்கும் உதவாத பொருட்களையெல்லாம் தானம் என்று தன் தந்தை கொடுப்பதை பார்த்து நசிகேதன் வருத்தமுற்றான். எப்படியாவது தன் தந்தையின் தவறை அவருக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணினான். நேரடியாக கேட்டால் தந்தை கோபிக்ககூடும் என்பதால் மறைமுகமாக உணர்த்த நினைத்தான்.

அவன் வாஜ்ரவஸிடம் சென்று "தந்தையே, என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்" என்றான். நசிகேதன் இப்படிக் கேட்டதற்கு காரணம் இருக்கு. ஒருவேளை தந்தை நீ எனக்கு உசத்தி, உன்னை எப்படி தானமாகக் கொடுப்பது என்று கேட்டால், உயர்ந்த பொருட்களைத் தானே தானம் கொடுக்க வேண்டும் நீங்கள் அவ்வாறு செய்யவில்லையே! என்று நாசூக்காக கேட்டுவிடலாம் என்று எண்ணினான்.

ஆனால் தந்தை எந்த பதிலும் சொல்லவில்லை. சிறுவன் ஏதோ கேட்கிறான் என்று இருந்துவிட்டான். மீண்டும் நசிகேதன் தந்தையிடம் "என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்" என்றான். இப்போதும் ஒன்றும் சொல்லாமல் வேலையைப் பார்த்தான். மூன்றாவது முறையாகவும் "என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்" என்றான்.

வாஜ்ரவஸ் கோபமாக கர்ஜித்தான் "உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்!"

இந்த வார்த்தை தான் நசிகேதன் எமனைச் சந்திக்க காரணமானது.ரயிலில் இரவு உணவு உண்ண எல்லோரும் தயாரானோம். ரயிலும் வாழ்க்கையும் ஒன்றாக பயணித்துக் கொண்டிருந்தது, அடுத்த நாளை நோக்கி.

தொடர்ந்து பயணிப்போம்...
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

2/16/2010

ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 2 கொடியது, இனியது, பெரியது, அரியதுஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது. அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார்.

ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.

அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.

“பாட்டீ....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா? என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.

ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, “சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!” என்றார்.

ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் “பாட்டீ.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான்.

ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.

“சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....” என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.

மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.

ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.

“பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!” என்று கூறினான்.

அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.

ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.

தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, (கதலித்தண்டு) வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.

ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.

‘முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.

முருகனை வணங்கிய ஒளவையாரின் மனத்திலிருந்த புலமைக் கர்வம் அகன்றது; நெஞ்சில் அமைதி குடி கொண்டது.

ஒளவையாரைப் பார்த்து முருகன், “ஒளவையே உமது அமுதத் தமிழைக் கேட்கவும் சில ஐயங்களுக்குத் தெளிவு பெறவுமே நான் வந்தேன். எனது ஐயங்களைத் தங்கள் அன்பு மொழியால் போக்குங்கள்” என்றான்.

“முருகா! நீ அறியாதது எதுவும் உண்டா? நீ சாமிநாதனாக இருந்து உன் தந்தைக்கே மந்திரம் சொன்னவன் அப்பா! உனது ஐயத்தைப் போக்கும் பெருமை என் தமிழுக்குக் கிடைக்கட்டும்” என்றார் ஒளவையார்.

அப்போது முருகன் "கொடியது, இனியது, பெரியது, அரியது இவற்றை எனக்கு விளக்கிச் சொல்வாயாக!" என்று கேட்டான். அதற்கு ஒளவையார் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற அவர்கையில்
உண்பதுதானே

இந்த உலகில் மிகவும் கொடுமையானது எது என்றால் வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிக மிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும்.

தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானது அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும் என்று கொடுமையானவற்றுள் எல்லாம் மிகவும் கொடுமையானது அன்பு இல்லாத பெண் இடும் உணவை உண்பதுதான் என ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!

இந்த உலகில் மிகவும் இனிமையானது எது என்றால், தனிமையில் இருப்பதுதான் இனிமையானது. அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது.

இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.


பெரியது

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன். எனவே திருமால் தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத்தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர்.

எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது என்று ஒளவையார் பாடினார்.

அரியது

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது.

அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும் என்று ஒளவையார் பாடியுள்ளார்.

தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததே ஆகும். ஆன்மீகம் இல்லாமல் தமிழ் இல்லை. ஆனால் நாத்திகம் தான் தமிழர் மரபு என்ற தோற்றம் உண்டாகும் வகையில் ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழகம் தவறான பாதைக்குத் திருப்பப்பட்டு வருகிறது.

ஆனாலும் ஆன்மீகமில்லாமல் தமிழ் இல்லை என்பதற்கு ஒளவையாரே சான்று.
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

பயமே ஜெயம்!சென்ற பதிவில் விவேகானந்தர் எதிலெல்லாம் பயங்கள் இருக்கிறது என்றும் துறவில் தான் பயமே இல்லை என்றும் கூறியிருந்தார் என்பதைப் பார்த்திருந்தோம்.

ஆனால் எல்லோரும் ஓர் இரவில் துறவியாகி பயத்தை வென்று நிர்பயத்துவம் எய்தி சிரிக்க முடியாதே! சம்சார வாழ்க்கை நமக்கு பணிக்கப்பட்டிருக்கிறது. அதில் பயணித்தாகவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்நிலையில் பயத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

நம்மைப் போன்றவர்கள் பயத்தை ஒரு உந்து சக்தியாகவே பார்க்க வேண்டும். எதிலெல்லாம் நாம் பயப்படுகிறோமோ அதிலிருந்து தான் விடுதலை அடைகிறோம். சாமானிய மனிதன் முதலில் உணர்வு விலங்குகளிலிருந்து விடுதலை அடைய வேண்டும். விடுதலை அடைந்தவனே ஆனந்தத்தை அனுபவிப்பான்.

பயமே இல்லை என்று நடிப்பவனைவிட பயத்தால் உந்தப்பட்டு வீரிட்டு எழுந்து விடுதலை அடைந்தவனே உலகை வெல்வான். ஆனந்தத்தை அனுபவிப்பான். ஆகவே பயத்தை ஒரு உந்து சக்தியாக பயன்படுத்துங்கள். பயத்தை படிக்கட்டாக பயன்படுத்துங்கள். பயந்து தெளியுங்கள். பயமே ஜெயம் என்பீர்கள்!

இறப்பின் மீது பயம் கொள்வீர்
ஞானத்திற்கு அதுவே உந்து சக்தி!

வறுமையின் மீது பயம் கொள்வீர்
உழைப்பிற்கு அதுவே உந்து சக்தி!

வயோதிகம் மீது பயம் கொள்வீர்
வாலிபத்திற்கு அதுவே உந்து சக்தி!

தோல்வியின் மீது பயம் கொள்வீர்
வெற்றிக்கு அதுவே உந்து சக்தி!

நோயின் மீது பயம் கொள்வீர்
உடற்பயிற்சிக்கு அதுவே உந்து சக்தி!

வன்முறை மீது பயம் கொள்வீர்
அன்பிற்கு அதுவே உந்து சக்தி!

இயற்கையின் மீது பயம் கொள்வீர்
இறைதேடலுக்கு அதுவே உந்து சக்தி!

காலத்தின் மீது பயம் கொள்வீர்
வேகத்திற்கு அதுவே உந்து சக்தி!

மறுமையின் மீது பயம் கொள்வீர்
புண்ணியம் தேட அதுவே உந்து சக்தி!

துயரங்கள் மீது பயம் கொள்வீர்
விடுதலைக்கு அதுவே உந்து சக்தி!

பயத்தாலே புண்ணியவான் ஆனான் ரத்னாகரன். கொலை, கொள்ளையில் ஈடுபட்டேனும் பொருள் ஈட்டி பெற்றோரையும் குடும்பத்தையும் காத்துவந்தான். பாவங்கள் பல செய்து வந்தான்.

ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத முனிவர், "நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்?" என்றார். என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன்.

"சரி, நீ செய்து கொண்டிருக்கும் பாவங்கள் எவ்வளவு பெரியது தெரியுமா? மரணத்திற்கு பின்னால் மறுமையின் வாழ்வில் நீ அதனால் என்னென்ன துன்பங்கள் அனுபவிப்பாய் என்பது உனக்குத் தெரியுமா?" என்றார்.

ரத்னாகரனுக்கு மறுமையைப் பற்றி ஒரு பயம் உண்டானது. நாரதர் தொடர்ந்தார் "உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன் குடும்பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத் தையும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?" என்றார். இதற்கு ரத்னாகரன் 'ஆம்' என்றான். அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங்கேயே நிற்கிறேன்," என்றார்.

ரத்னாகரன் பெற்றோரை பார்க்கச் சென்றான். வீட்டிற்கு சென்றதும், "என் வருமானத்தில் மகிழ்ச் சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும் பங் கிட்டுக் கொள்வீர்களா?" என குடும்பத்தாரிடம் கேட்டான்.

அவனது பெற்றோர், "பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும் தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான்" என்றனர். அவனது மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர்.

ரத்னாகரன் கலக்கமுற்றான். அத்தனை பாவங்களுக்கும் நான் மட்டுமே பொறுப்பாவேனா என்று பயந்தான். அதனால் உண்டாகப்போகும் விளைவுகளை எண்ணி நடுங்கத் துவங்கினான். பாவங்களின் அழுத்தம் அவனை வாட்டியது.

மீண்டும் நாரதரை சந்திக்க வந்தான். 'இந்த பாவங்களிலிருந்து விடுபட எனக்கு உபாயம் சொல்லுங்கள்' என்றான்.

நாரதர் ராமநாமத்தை உச்சரிக்கச் சொன்னார். பாவங்களின் மீது பயம் கொண்டவன் ஓரிடத்தில் அமர்ந்து தொடர்ந்து ராம நாமத்தை உச்சரித்தான்.

அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. அவன் உடலைச் சுற்றி "வால் மீகம்" வளர ஆரம்பித்தது. வால்மீகம்' என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன் அவனுக்கு அருள்பாலித்தார்.

அவன் புற்றிலிருந்து வெளிப் பட்டதால் "வால்மீகி" என அழைக்கப்பட்டான்.

இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம் என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.

மறுமையின் மீதிருந்த பயமே ரத்னாகரனின் உந்து சக்தியானது. அவன் வால்மீகியாக மாற அதுவே தூண்டுகோலானது.

ஆக நம்மைப் போன்று துறவுக்கு போக முடியாத சாமானியர்களுக்கு வாழ்க்கையின் பயணத்தைக் கடக்க அந்தராத்மாவின் உந்து சக்தியே அதிகம் தேவை. எனவே பயப்படுங்கள். அதே வேகத்துடன் பயத்தை வெல்லுங்கள்.

பயத்தை வெல்வோம், விவேகானந்தர் ஆவோம்.


கொசுறு: புதுப்பேட்டை என்ற படத்தில் தனுஷ் முதன் முதலாக குற்றம் செய்யப்போவார். கூட வந்தவன் கேட்பான்

"என்ன பயமா இருக்கா?"

"ம்ம்ம்"

"பரவாயில்லை, பயம் தான் நம்மள காப்பாத்தும்"
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

2/13/2010

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்!


சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

சீடர்: 'சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?"

சுவாமி விவேகானந்தர் "உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் "சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா'- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது' என்று கூறுகிறார்.

அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.

மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. அதனால் தான் வேதங்கள், 'அறிபவனை எதனால் அறிவது?' என்று கேட்கின்றன.

உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. 'உணரப்படுகிறது' என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.

மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.

இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!

- சுமாவி விவேகானந்தர்.

சரி நாம் எதற்கெல்லாம் பயப்படுகிறோம்? லிஸ்ட் போட்டு பார்த்தால் வெல்ல வேண்டிய பயங்கள் வெளிப்படுமோ?

போட்டு பாப்போம்!
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

2/09/2010

விக்கிரமாதித்தன் கதைகள் - 11


மணமுடித்த பெண்ணோடு வாழ்வதா அல்லது துர்காதேவிக்கு கொடுத்த வாக்குப் படி தன் தலையை காணிக்கையாக்கி சாவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் வஜ்ரவீரன்.

அன்று பௌர்ணமி. வஜ்ரவீரன் ஒரு முடிவெடுத்தான்...

துர்காதேவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற துனிந்தான். ஆனால் தன் நண்பனிடத்திலும் மனைவி இடத்திலும் இது பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருவரையும் தன்னுடன் கோவிலுக்கு வருமாறு அழைத்தான்.

மூவரும் சேர்ந்து துர்க்காதேவி கோவிலுக்குச் சென்றனர். வஜ்ரவீரன் இருவரையும் கோவில் வாசலில் இருக்கச் செய்து தான் மட்டும் கோவிலுக்குள் சென்று கதவை சார்த்திக் கொண்டான்.

அவன் துர்காதேவியிடம் "அண்ணையே உன் மீது பேரண்பு கொண்டதால் உனக்கு அளித்த வாக்கு படி என் தலையை உனக்கு காணிக்கையாக்குகிறேன். இனி என் மனைவியை நீ தான் காக்க வேண்டும்" என்று சொல்லி தன் தலையை வெட்டி அம்மனின் காலடியில் இட்டு மாண்டான்.

வஜ்ரவீரனின் மனைவியும் நண்பனும் வெளியே காத்திருந்தனர். உள்ளே போய் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் நண்பன் ருத்ரராஜன் கோவிலுக்குள் சென்று பார்த்தான். அங்கே அவன் கண்ட காட்சி பேரதிர்ச்சியாய் இருந்தது.

நண்பன் தன் தலையை துண்டித்து இறந்து போய் இருந்தான். இந்த காட்சியைக் கண்டு நிலை குலைந்து போன நண்பன் எப்படி வெளியே இருக்கும் அவன் மனைவியிடம் சொல்வேன் என்றும், அவள் என்னை தவறாக நினைத்தால் என்ன செய்வது என்றும் பெரிதும் வருந்தினான்.

தன் உயிருக்குயிரான நண்பனின் இந்த நிலையை பார்த்துவிட்டு நான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று தீர்மானித்த ருத்ரராஜன் தானும் தன் தலையை துர்க்காதேவிக்கு
காணிக்கையாக்கி மாண்டான்.

தன் கணவனும் அவர் நண்பனும் கோவிலுக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே
வராததால் வஜ்ரவீரனின் மனைவி கோவிலுக்குள் சென்று பார்த்தால். அங்கே இருவரும் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த காட்சி பார்த்து அழத்துவங்கினாள்.

அவள் துர்கையிடம் முறையிட்டாள் "என் கணவன் இல்லாத வாழ்க்கை எனக்கு எதற்கு, அதனால் என் தலையையும் நீயே எடுத்துக்கொள்" என்று சொல்லி தனது தலையை துண்டிக்க முற்பட்டாள்.

அப்போது அங்கே ஒரு பேரொளி தோன்றியது. துர்க்காதேவி அவள் முன் தோன்றினாள். "பெண்ணே! அவசரப்படாதே! நில். என் பக்தன் வஜ்ரவீரனின் பக்தி கண்டு நான் மகிழ்ந்தேன். ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்யத் துணியும் உங்களை கண்டு பூரித்தேன்! பக்தர்களை வாழவைப்பதே என் வேலை உங்கள் தலைகளை காணிக்கை வாங்குவது அல்ல. எனவே நான் அவர்களுக்கு
உயிர் கொடுக்கிறேன். பெண்ணே! இவர்கள் இருவரது தலையையும் அவர்கள் உடலோடு பொருத்து. அடுத்த வினாடி அவர்கள் உயிர் பெற்று எழுவார்கள்" என்று கூறி மறைந்தாள் துர்க்காதேவி.

அப்பெண்ணும் இறந்தவர்களின் தலைகளை ஒன்றாகப் பொருத்தினாள். இருவரும் உடனே உயிர் பெற்று எழுந்தனர். அப்போது தான் அவள் செய்த தவறு புரிந்தது. பதற்றத்தில் தன் கணவனான வஜ்ரவீரனின் தலையை ருத்ரராஜனின் உடலிலும், ருத்ரராஜனின் தலையை வஜ்ரவீரனின் உடலிலும் பொருத்தி விட்டாள்.

இதுவரை கதை சொல்லி வந்த வேதாளம் கதையை நிறுத்தியது. அது விக்கிரமாதித்தனைப் பார்த்து கேட்டது "நீதியில் சிறந்த விக்ரமாதித்தா! எங்கே சொல், இந்தப் பெண் இப்போது யாரை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?" என்றது.

"கணவனின் தலை எந்த உடலில் இருக்கிறதோ அந்த உடலைத் தான் அந்த பெண் தன் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தலையே பிரதானம். ஏனெனில் தலை தான் ஒருவரது அடையாளத்திற்கும், எண்ணத்திற்கும் பிரதானமானது." என்றான் விக்கிரமாதித்தன்.

இதைக் கேட்ட வேதாளம் "சரியாகச் சொன்னாய் விக்ரமாதித்தா! ஆனால் நீ வாய் திறந்து பேசியபடியால் நான் செல்கிறேன்" என்று கூறி மீண்டும் விக்ரமாதித்தன் பிடியிலிருந்து பறந்து சென்றது.

_________________________

பயப்படாதீங்க. சும்மா வ்ளாட்டுக்கு!


மேற்கண்ட படத்தை பற்றி சிறப்பாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு, அதே படம் இலவசமாக இமெயில் செய்யப்படும்.
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

2/02/2010

உபநிஷத்து கதைகள் 2

பஞ்சம: கண்ட: ஐந்தாவது காண்டம்

அதஹைனமத்ரி: பப்ரச்சா யாஜ்ஞவல்க்யம் |
ப்ருச்சாமி த்வா யாஜ்ஞவல்க்ய அயஜ்ஞோபவீதீ கதம் ப்ராஹ்மண இதி |
ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய :|
இ தமேவாஸ்ய தத்யஜ்ஞோபவீதம் ய ஆத்மா |
அப : ப்ராச்யாசம்யாயம் விதி: பரிவ்ராஜகானாம்|
வீராத்த்வனே வா அநாசகேவா அபாம் ப்ரவேசே
வா அக்னிப்ரவேசே வா மஹாப்ரஸ்த்தானே வா
அத பரிவ்ராட் விவர்ணவாஸா முண்டோ Sபரிக்ஹ:
சுசிரத்ரோஹீ பைக்ஷணோ ப்ரஹ்மபூயாய பவதீதி |
யத்யாதுர: ஸ்யான் மனஸா வாசா ஸந்ந்யஸேத் |
ஏஷ பந்தா ப்ரஹ்மணா ஹானுவித்தஸ் தேனைதி
ஸந்ந்யாஸீ ப்ரஹ்மவிதித்யேவமேவைஷ பகவன் யாஜ்ஞவல்க்ய || 5 ||

அத்ரி யாக்ஞவல்கியரைக் கேட்டதாவது:- யாக்ஞவல்கியரே!
உம்மைக் கேட்கிறேன், பிராம்மணன் எப்படி யக்ஞோபவீதம்
இல்லாமலிருக்கலாம் என்று. அந்த யாக்ஞவல்கியர் கூறியதாவது
(ஞானியானால) ஒருவனுக்கு ஆத்மா எதுவோ அது யக்ஞோபவீதம்.
(யக்ஞோப வீதத்தை விட்டு ஸந்நியாஸ மேற்கும் முறையைக் கூறுகிறேன்).

ஆபோசனம் செய்து பரிஸ்ராஜகனாவதற்கு இது விதி. வீரர்களான துறவிகள் சென்ற வழியைப் பின் பற்றி (வைராக்கியம் வேலிட்டவன்) பட்டினியிருந்தோ, ஜலத்தில் பிரவேசித்தோ, அக்னியில் பிரவேசித்தோ, மஹாப்ரஸ்த்தான யாத்திரையை மேற்கொண்டு உடல் விழும் வரை வடக்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தோ தெவையற்றுப்போன உடலை உகுத்து விடலாம். (உடலில் இருக்கும் வரை) பரிவ்ராஜகன் துவராடை உடுத்துத் தலையை மழித்து, உடைமையேது மில்லாதவனாயும் பரிசுத்தனாயும் எவ்வுயிக்கும் தீங்கு நினையாதவனாயும், பிக்ஷான்னத்தால் திருப்தியடைபவனாயும் இருந்தால் அவன் பிரம்மமேயாவதற்கு உரியவனாவான். (அந்த மாதிரி இருக்கச் சக்தியற்று) நோய்வாய்ப்பட்டவனானால் மனதாலும் வரக்காலும் ஸந்நியாஸத்தை மேற்கொள்ளலாம். மனதின் பரிபக்குவம் தான் முக்கியம்). இந்த வழி பிரம்மாவால் கண்டுபிடிக்கப்பட்டது. பிரம்ம ஞானியான் துறவி அவ்வழியைப் பின்பற்றுகிறான். (அத்ரி மகரிஷி கூறியதாவது) பகவத்ஸ்வரூபியான யாக்ஞ வல்கியரே: (நீர் கூறியது உண்மை.) அது அப்படித்தான்.

ஷஷ்ட: கண்ட: ஆறாவது கண்டம்

தத்ர பரமஹம்ஸா நாம ஸம்வர்த்தகாருணி-ச்வேத கேது-துர்வாஸ-ருபு நிதாக-ஜடபரத
-தத்தாத்ரேய-ரைவக-ப்ரப்ருதயோ Sவ்யக்தலிங்கா அவ்யக்தா சாரா அனுன்மத்தா
உன்மத்தவதாசரந்த : || 6.1 ||

த்ரிதண்டம் கமண்டலும் சிக்யம் பாத்ரம் ஜலபவித்ரம் சிகாம்
யஜ்ஞோபவீதஞ்ச இத்யேதத் ஸர்வம் பூ :
ஸ்வாஹேத்யப்ஸு பரித்யஜ்ய ஆத்மானமன் விச்சேத் ||6.2 ||

யதா ஜாதரூபதரோ நிர்க்ரந்த்தோ நிஷ்பரிக்ரஹஸ்-தத்தத்
ப்ரஹ்மமார்க்கே ஸம்யக்ஸம் பன்ன : சுத்த
மானஸ : ப்ராண - ஸந்த்தாரணார்த்தம் யதோக்த காலே
விமுக்தோ பைக்ஷமாசரன்னுதரபாத்ரேண லாபாலாபயோ:
ஸமோ பூத்வா சூன்யாகார-தேவக்ருஹ- த்ருண கூட-வல்மீக-
வ்ருக்ஷமூல-குலால-சாலாக்னிஹோத்ர க்ருஹ- நதீ- புலின- கிரி
குஹர-க்ந்தர-கோடர- நிர்ஜரஸ்த்தண்டிலேஷு தேஷ்வநிகேத
வாஸ்ய ப்ரயத்னோ நிர்மம : சுக்லத்த்யானபராயணோSத்யா
கம் கரோதி ஸ பரமஹம்ஸோ நாம் பரமஹம்ஸோ நாமேத்யுபநிஷத் ||6.3 ||

1. அந்த ஸந்நியாஸ விக்ஷயத்தில் பரமஹம்ஸர்கள் எனப்பிரசித்தமானவர்கள் ஸ்மவர்த்தகர்,
ஆருணி, ச்வேதகேது, துர்வாஸர், ருபு, நிதாகர், ஜடபரதர், தத்தாத்ரேயர், ரைவதகர் முதலியவர்கள்.
அவர்கள் அடையாளங்காணமுடியாதவர்கள், நடத்தை காண முடியாதவர்கள், பித்தர்களல்லராயினும் பித்தர்களைப் போன்ற நடத்தை உடையவர்கள்

2. தண்டம், கமண்டலு, உக்கம் (கயிற்றினால்) செய்த உரி, பாத்திரம், பரிசுத்தம் செய்யத் தீர்த்தம், சிகை, பூணூல் என்ற (பிராம்மணன், ஸ்நியாஸி முதலியவர்களுக்கான) எல்லா அடையாளப் பொருள்களையும் "பூ : ஸ்வாஹா" என்று சொல்லி (ஹோம புத்தியுடன்) ஜலத்தில் போட்டுவிட்டு ஆத்மா ஒன்றையே விரும்பிப் பின்பற்ற வேண்டும்.

3. பிறந்த மேனியாக (ஆடையேதுமில்லாமல்), முடிச்சேதுமில்லாமல், உடைமையேதுமில்லாமல் 'தத்' என்ற பிரம்ம மார்க்கத்தில் பரிபூரண நிறைவுற்றவனாகவும் பரிசுத்த மனம் படைத்தவனாகவும், பிராணனை உடலில் வைத்திருப்பதற்காக உரிய காலத்தில் வெளிச்சென்று பிக்ஷையைக் கைக் கொண்டு, வயிற்றையே உண்கலமாகக் கொண்டு (வேறு பாத்திரத்தில் பிக்ஷான்னத்தைக் கூட வைக்காமல்) இலாபத்திலும் நஷ்டத்திலும் ஸம சித்தனாகவும் இருந்து கொண்டு, பாழ்வீடு, தேவாலயம், புல்மேடு, புற்று, மரத்தடி, குயவன் சர்லை, அக்னிஹோத்ர சாலை, நதி மணல், மலை பொந்து, குகை, மரப்பொந்து, மலையருவி போன்ற இடங்களில், தனக்கென்று ஒரு தங்குமிடமில்லாமல் வசித்துக் கொண்டு, எந்தப் பிரவிருத்தியிலும் ஈடுபடாமல், மமகாரமில்லாமல், ந்ப்பொழுதும் பரிசுத்தமான ஸாத்விக தியான பரனாய், அத்தியாத்ம நிஷ்டனாய், மோக்ஷ மார்க்கத்திற்கு அனுகூலமில்லாத கர்மாக்களை வேருடன் களைந்தவனாய்
ஸந்நியாஸத்தால் தேகம் தன்னை விடுமுன் தான் அதை விட்டவனாய் உள்ளவன் எவனோ அவனே பரம ஹம்ஸன் எனப் பிரசித்தி பெற்றவன் என்பது உபநிஷத்து.


உபநிஷத்தின் விஷயச் சுருக்கம் :

குருக்ஷேத்ரம் என்றும் வாராணஸி என்றும் முக்கியமான புண்ணிய க்ஷேத்திரங்கள் பாரத பூமியில் சேவிக்கப்படுவது போல் உடலிலேயே சேவிக்கத்தக்க புண்ணிய மான இடம் 'அவிமுக்தம்' என்றும் 'பிரம்மஸதனம்' என்றும் புகழப்படும் புருவ மத்தி. 'ப்ருவோர்மத்த்யே ப்ராணமாவேச்ய ஸம்யக் ஸ தம்பரம் புருஷ முபைதி திவ்யம்' என்று பகவத்கீதை
இதைக் கூறுகிறது.

ஒரு ஜீவனின் பிராணன் உடலை விட்டுக் கிளம்புகையில் நெற்றிக் கண்ணனாகிய ருத்ரர் அங்கு தோன்றி அந்த ஜீவனுக்கு தாரகப் பிரம்மத்தை உப்தேசித்து உய்விக்கிறார் என்ற புராணக் கூற்று வாராணஸியில் யோகிகளால் பிரத்யக்ஷமாகக்
காணப்படுகிறது என்பதில் அவிமுக்தம் எனும் புருவ மத்தியில் தியானத்தால் பரம சிவனுடைய அருள் சித்திக்குமென்பதும் அதனால் முக்தி என்பதும் உள்ளடங்கிய கருத்து.

அளவு கடந்ததாகவும் வெளிப்படையாகத் தோன்றாததாகவும் உள்ள ஆத்மா வாராணஸி எனும் இடத்தில் தியானத்தால் காணப்படும். வரணா என்ற புருவங்களுக்கும் நாசி என்ற மூக்குக்கும் மத்தியில் உடலிலுள்ள ஸ்தானமே வாராணஸி. இந்திரியங்கள் செய்யும் பாவங்களை 'வாரயதி ' தடுக்கிறது என்றதால் அது வரணா; பாவங்களைச் செய்தபின் அவற்றை நாசம் செய்கிறது என்பதால் 'நாசி'. அது இவ்வுலகிற்கும் மேலுலகிற்கும் ஸந்தி, கூடுமிடம். இந்த ஸந்தியையே ஞானிகள் ஸந்தியாவந்தனத்தில் உபாசிக்கின்றனர். அதில்லாமல் முக்தியில்லை.

முக்தி எய்துவதற்காகவே ஸந்தியாஸம் ஏற்கப்படுகிறது. பிரம்மசரியத்திலிருந்தோ, கிருஹஸ்தாசிரமத்திலிருந்தோ, வானப்பிரஸ்தாசிரமத்திலிருந்தோ எப்பொழுது ஒருவனுக்கு வைராக்கியம் பிறக்கிறதோ அப்பொழுது ஸந்நியாஸம் ஏற்கலாம். 'யதஹ - ரேவ விரஜேத் ததஹ - ரேவ ப்ரவரஜேத்'.

சிலர் ஸந்தியாஸத்திற்கு முன் பிராஜா பத்ய இஷ்டி முதலியவற்றைச் செய்கின்றனர். அவை அவசியமில்லை. 'மானசீகமாகத் துறவை ஏற்கலாம். அக்னியை நாள் தோறும் வழிபட்டுக் கொண்டுருந்தவன் அந்த அக்னியைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு விடலாம். 'அக்னியா! மேலே கிளம்பி உன் பிறப்பிடமான பிராணனில் புகுந்து விடு. எங்களுக்கு முக்திச்செல்வத்தைச் செழிக்கச்செய்' என்ற மந்திரத்தால் அக்னி சக்தியைப் பிராண வாயுவுடன் உள்ளே இழுத்துக்
கொண்டு 'ப்ராணம் கச்ச ஸ்வாஹா' - ப்ராணனுக்குள்ளே மறைந்து போ - என்ற அதையே விரஜா ஹோமமாகக் கருதலாம். அல்லது அருகாமையிலுள்ள கிராமத்திலிருந்து பரிசுத்தமான அக்னியைக் கொணர்ந்து அதில் மேற்கூறிய மந்திரத்தால் ஹோமம் செய்யலாம். அக்னி அருகாமையில் கிடைக்காவிட்டால் ஜலத்தில் ஹோமம் செய்யலாம். ஜலமே எல்லாதேவதைகளின் ஸ்வரூபம். இந்த ஹோமத்திற்குப் பின் 'மயா ஸந்ந்யஸ்த: மயா ஸந்ந்யஸ்த: மயா ஸந்ந்யஸ்த:' என்றூ மூன்று தடவை சொன்னால் போதும்.

ஸந்நியாஸிக்குப் பூணூல் வேண்டுமா என்றால் வேண்டியதில்லை. வைராக்கியம் தீவிரமாக ஏற்பட்டால் எல்லா அடையாளங்களைத் தரிக்கும் உடலையுங்கூட அக்னியிலோ, ஜலத்திலோ விட்டு விடலாம். உடலில் இருக்கும் வரை பரிவ்ராஜகன் (ஒரிடத்திருக்காமல் போயககொண்டே இருப்பவன்) துவராடை உடுத்துத் தலையை மழித்து, உடைமை ஏதுமில்லாதவனாய்ப் பிரிசுத்தனாய், எவ்வுயிர்க்கும் தீங்கு யடைந்தவனாய்ப்பற்றற்றுப் பரம ஹம்ஸர்களை
லக்ஷியமாகக் கொண்டு வாழ வேண்டும். முன் காலத்தில் பரமஹம்ஸர்களில் பரிசுத்தமானவர்கள் ஸம்வர்த்தகர், ஆருணி, ச்வேத கேது, திர்வாஸர், ருபு, நிதாகர், ஜடபரதர், தத்தாத்ரேயர், ரைவதகர் ஆகியோர். அவர்கள் அடையாளங் காண முடியாதவர்கள், நடத்தை காணமுடிதாதவர்கள், பித்தர்களல்ல ராயினும் பித்தர்களைப் போன்ற நடத்தை உடையவர்கள். பிறந்த மேனியாக(ஆடையேதுமில்லாமல்) முடிச்சேது மில்லாமல், உலககர்மாகள். அவர்களே வாழ்வாங்கு வாழ்ந்த உத்தமர்கள் என்று உபநிஷதம் கருதுகிறது.

இங்ஙனம் ஜாபாலோபநிஷத்து முற்றும்


என்றும் அன்புடன்

________________

மரணத்திற்கு அப்பால் - 2நசிகேதன் பற்றியும் மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்பது பற்றியும் யோசித்துக் கொண்டே ஒரு வழியாக பயணத்தில் நானும் கண்ணசந்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் குருசாமி எழுப்பினார். தம்பி சாமி, "போய் குளிச்சிட்டு வாங்க கியூல நிக்கனும்" என்றார்.

எங்கே இருக்கிறோம் என்று கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் குருசாமி குருவாயூர் கூட்டத்தில் குளிக்கச் சொல்கிறார் என்பது தாமதமாகத்தான் புரிந்தது.

"என்னது குளிக்கிறதா?", கைக்கடிகாரத்தை கண்ணைத்துடைத்துக் கொண்டு பார்த்தேன். கடிகார முட்கள் இரவு பண்ணிரெண்டை படுத்துக்கொண்டே காட்டியது ஒன்றன் மீதொன்றாய். "இந்த நேரத்தில் குளிக்கவா அதுவும் இந்த குளிரிலா?" யோசிக்க நேரமில்லை. எல்லோரும் குளித்து குருவாயூர் கம்பிவரிசையில் போய் நின்றோம்.

இரவு மணி ஒன்று. அர்த்த ராத்திரியும் நன்பகல் போலவே வெளிச்சமும் வியாபாரமுமாக இருந்தது குருவாயூர் கோவில் வாசல். அந்த இரவில் கூட நாங்கள் ஐந்தாவது கம்பி வரிசையில் தான் நின்று கொண்டிருந்தோம். "

என்ன சாமி, மணி ஒன்னாகுது, எப்ப கோவில் திறப்பாங்க?" என்றேன். மூன்று என்று விரலால் நாமம் சாத்தினார். தூக்கமா தலை சுற்றலா என புரியாமல் தரையில் அப்படியே உட்கார்ந்து கொண்டேன். குருசாமியோ "என்னப்பா இன்னும் ரெண்டு மணி நேரம் தான், இதுக்குள்ள அசந்துட்டியே" என்று அருகில் உட்கார்ந்தார்.

பின்ன இல்லையா, ஒரே இடத்தில் இரண்டு மணிநேரம் சும்மா நிற்பதென்றால் சும்மாவா!

சரி குருசாமியிடம் நேற்று பாதியில் நிறுத்திய பேச்சை தொடங்குவோம் என்று என் சந்தேகத்தை கேட்கத் துவங்கினேன்!

"குருசாமி! நசிகேதன், உபநிஷத்துன்னு ஏதேதோ சொன்னீங்களே! அதக் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்" என்றேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து அவரே அழகாக விளக்கத்துவங்கினார்.

"தம்பி சாமி, மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது அப்படீன்னு நசிகேதன் எமதர்மன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டான். அதுக்கு உபநிஷத்துன்னு பேரு. அதுக்கு முன்னாடி உபநிஷத்துன்னா என்னன்னு சொல்லிடறேன்."

“உபநிஷத்” என்ற சொல்லுக்கு அருகில் அமர்தல் என்று பொருள். குருவும் சீடனுமாக அருகமர்ந்து ஞானத் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற வேத ரிஷிகளின் அனுபவங்களிலிருந்து வெளிப்பட்ட நூல்களே உபநிஷதங்கள்ன்னு சொல்வாங்க. பின்னர் இவை தொகுக்கப் பட்டு ஞான காண்டம் என்று வழங்கும் வேதப் பிரிவாக ஆயின.

உபநிஷதங்கள் மொத்தம் 108 என்று சம்பிரதாயமாக அறியப்பட்டாலும், வேதாந்த தத்துவத்தில் “முக்கிய உபநிஷதங்கள்” என்று அறியப்படுபவை 10. இவற்றில் 8 உபநிஷதங்கள் ரொம்பவும் முக்கியமானவை. அவை இந்த வரிசையில் வெளிவந்துள்ளன.

ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
கட உபநிஷதம் (மரணத்திற்குப் பின்னால்)
ப்ரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
முண்டக உபநிஷதம் (நிழலும் நிஜமும்)
மாண்டூக்ய உபநிஷதம் (ஒன்றென்றிரு)
ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
தைத்திரீய உபநிஷதம் (வாழ்க்கையை வாழுங்கள்)

இப்படி எட்டு உபநிஷதங்கள் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பெரியவங்க சொல்றாங்க.

"இதுல நசிகேதஸ் எந்த உபநிஷத்துல வர்ராரு?"

"இரு சொல்றேன்! நசிகேதஸ் பத்தி 'கட உபநிஷதத்துல' வருது. ஒவ்வொரு உபநிஷத்தும் ஒவ்வொரு கோனத்துல ஆத்மா பரமாத்மா பத்தி சொல்வதாக வருகிறது. இறப்பிற்கு பின்னால் நமக்கு என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்த மாதிரி தற்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்ற வகையில் இவை ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறது.

உதாரணமாக ரிடையர்மென்ட்க்கு அப்பறம் நம்ம வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதுன்னு இப்ப நினைச்சிப் பாத்தா ரொம்ப பயமா இருக்கும். அப்பறம் காசுக்கு என்ன பண்ணுவோம் என்று மனதில் ஒரு சிந்தனை உண்டாகும். அப்படி ஒரு காலம் வரும் போது அதை எப்படி சமாளிப்பது என்று நினைத்து இப்பொழுதே பணம் சேர்க்கத் துவங்குவோம். நிலத்தில் முதலீடு செய்வோம். தங்கம் வாங்கி வைப்போம். வங்கியில் நிலையான முதலீடுகள் இடுவோம். அவற்றின் மதிப்பு பின்னாட்களில் அதிகரிக்கும் போது அதை வைத்து நமது ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை சமாளிப்போம்.

ஆம். நம்முடைய பிறப்பும் இந்த வாழ்க்கையும் ஒரு இடைக்கால நிகழ்வுதான். எப்படி நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்க்கு முன்னும் நமக்கு வாழ்க்கை இருந்ததோ, எப்படி நாம் ரிட்டையர் ஆன பின்பும் வாழப்போகிறோமோ, அதே போல் தான் பிறப்பும் இறப்பும்.

நாம் பிறப்பிற்கு முன்னாலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். இறப்பிற்கு பின்னாலும் வாழப்போகிறோம். அதுவே உண்மை. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியங்களும் சேர்த்து வைக்கும் புண்ணிய பலன்களும் தான் நாம் இறந்ததற்குப் பின்னால் என்னவாகப் போகிறோம் என்பதை தீர்மானிக்கப்போகிறது.

அதாவது நம் உடலோடு இருக்கும் போதும் உடல் நீங்கி போனாலும் நாம் வாழ்கிறோம். நமது உடல் நாம் அல்ல. நாம் எதை எல்லாம் நான் என்று உணர்கிறோமோ அது நாம் அல்ல. எனது அழகு , எனது உடல், எனது நிறம், எனது உருவம் என்று எவற்றையெல்லாம் நாம் என்று நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோமோ, அது நாம் அல்ல.

உண்மையில் நமக்கு உருவம் கிடையாது. மகிழ்ச்சி, துக்கம், சிரிப்பு, அழுகை, காதல், காமம், ஆசை, பாசம், கோபம், என்று உண்மையில் என்னவெல்லாம் நாம் உணர்ச்சிகளாக உணர்கிறோமோ அதுவெல்லாம் நமக்குச் சொந்தமானது அல்ல. இவை நமக்குரியவை அல்ல.

அப்படியென்றால் அத்தகைய நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா"

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.

அதைப்பற்றித்தான் இந்த உபநிஷத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் எடுத்தியம்புகின்றன.

அதில் ஒன்று தான் நசிகேதன் பற்றிய கட உபநிஷத்து.

இவ்வளவையும் குருசாமி சொல்லி முடிக்க மணியைப் பார்த்தேன்! கோவில் கதவு திறக்க, குருவாயூரப்பனை தரிசிக்க இன்னும் நேரம் இருந்தது. எல்லோரும் காத்திருந்தோம் கதவு திறக்கும் நேரம் பார்த்து.

காத்திருப்போம்...


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

விக்கிரமாதித்தன் கதைகள் - 10


தலையும் உடலும்

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட
வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப்
பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு
நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து
கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும்
ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

முன்னொரு காலத்தில் பனாரஸ் நாட்டை சதுர்சன் என்ற அரசன் ஆண்டு
வந்தான். அவனுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

அரன்மனையில் இருந்த துர்கா தேவியிடம் பல நாட்கள் இக்குறை நீங்க வேண்டி
பூஜை செய்து வந்தான். அந்த பூஜா பலனால் அரசனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
அவனுக்கு வஜ்ரவீரன் என்று பெயரிட்டான்.

வஜ்ரவீரன் வளர்ந்து பெரியவன் ஆனான். அவனுக்கு அரசவையின் சலவைத்
தொழிலாளியான ருத்ரராஜன் நண்பனாக இருந்தான்.

ஒரு முறை நண்பன் வீட்டிற்குச் சென்ற வஜ்ரவீரன் அவன் வீட்டருகே ஒரு
அழகிய பெண்ணை பார்த்தான். அந்த பெண் மீது மோகம் கொண்டு அவளை
மனமுடிக்க விரும்பினான். இதை தன் நண்பன் ருத்ரராஜனிடம் தெரிவித்தான்.

ஆனால் ருத்ரராஜனோ அந்தப் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்தான்.
இந்நிலையில் நாட்டின் யுவராஜனும் தனது நண்பனுமான வஜ்ரவீரன்
அப்பெண்ணை மணக்க விரும்பியதை அறிந்து வருந்தினான். ஆனால்
நண்பனுக்காக தன் ஒருதலைக் காதலை விட்டுக்கொடுக்க முடிவு செய்தான்.
அதனால் தனது விருப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நண்பனுக்காக
விட்டுக் கொடுத்தான்.

ஆனால் வஜ்ரவீரனுக்கோ தனது தந்தை தன் விருப்பத்தை நிறைவேற்றுவாரா
என்று கவலை உண்டானது. அவன் துர்காதேவியிடம் சென்று "அம்மா துர்க்கா!
என் தந்தை நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைத்தால், வரும்
பௌர்ணமி தினத்தில் என் தலையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்" என்று
வேண்டினான்.

தனது நண்பனின் மனக்கவலையை உணர்ந்து கொண்ட ருத்ரராஜன் அவனைத்
தேற்றினான். நண்பனுக்காக தானே அரசனிடம் சென்று விஷயத்தை கூறலானான்.
"அரசே! தங்கள் மகனும் எனது நன்பனுமான வஜ்ரவீரனுக்கு
சலவைத் தொழில் புரியும் ஒரு பெண்ணின் மீது விருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். தாங்கள்
அனுமதிப்பீரா என்ற தயக்கத்தில் இருக்கிறான். அதை தங்களிடம் தெரிவித்துப்
போகவே வந்தேன்" என்றான்.

மன்னனோ "என் மகனின் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். அதனால் அவன்
விரும்பும் பெண்ணையே அவனுக்கு மணமுடித்து வைக்கிறேன்" என்றார்.

இதனைக் கேட்ட வஜ்ரவீரன் பெருமகிழ்ச்சி கொண்டான். பெரு விமரிசையாக
வஜ்ரவீரனுக்கும் அவன் விரும்பிய பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் துவங்கினர். இந்நிலையில் பௌர்ணமி
நாள் நெருங்கியது. வஜ்ரவீரனுக்கு துர்காதேவியிடம் தன் தலையை
காணிக்கையாக கொடுப்பதாய் வாக்கு கொடுத்தது ஞாபகம் வந்தது.

இனிமையான வாழ்க்கையை விட்டு பிரியவேண்டிய கட்டாயம் வந்தது. எந்தப்
பெண்ணோடு வாழ்வதற்க்காக பிரார்தனை செய்தானோ அந்தப் பெண்ணை
உடனேயே பிரியும் நிலை அவன் பிரார்த்தனையாலேயே உண்டானது.

மணமுடித்த பெண்ணோடு வாழ்வதா அல்லது துர்காதேவிக்கு கொடுத்த வாக்குப்
படி தன் தலையை காணிக்கையாக்கி சாவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான்.

அன்று பௌர்ணமி. வஜ்ரவீரன் ஒரு முடிவெடுத்தான்...
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com