தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

2/27/2012

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

மதம்
மனிதனும் மிருகமும்


மிருகங்கள் குறுக்குவாட்டில் ( horizontal ) வளர்கின்றன. இதனாலேயே அவற்றுக்குத் திர்யக் என்று பெயர். இதற்கு மாறாக உயர்ந்து மேல்நோக்கி (vertical) வளருகின்ற மனிதன் மற்றப் பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தைப் பெறவேண்டும். இப்படிச் செய்தால் இவன்தான் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம். ஆனால் நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமாக துக்கத்தைத்தான் நாம் அநுபவிக்கின்றோம். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனைக் கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மோலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கின்றோம்.

ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌக்கரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஒர் ஆயுதமும் இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்குக் கொம்பு இல்லை. நகம் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஒடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.

இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.

குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால். மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான். கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா. வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில்தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுதும் வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை

உபயோகப்படுத்தித் தனக்குச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான். துக்கப்படுகிறான். பிறந்து விட்டதனாலே இவ்வளவு கஷ்டம். இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது. பிறப்புக்குக் காரணம் என்ன. நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குக் தண்டனையாக இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால் இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டாலல், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை இந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதினாலே ஜனனம் உண்டாகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

ஆசைக்குக் காரணம் என்ன. நம்மைத் தவிர இன்னோன்று இருப்பதாக எண்ணுவதால் அதனிடம் ஆசை வருகிறது.

உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது. ஒரு மாடு தன்னைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா. இரண்டும் ஒரே பொருள் என்று நினைத்து அவன் சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதினால் கோபம் வருகிறது. கோபம் வருவதினால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை. பாபம் இல்லை. காரியம் இல்லை. ஜனனம் இல்லை. துன்பமும் இல்லை.

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது. நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும். மனிதன் அப்போது தெய்வமாவான்.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாகவே ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாயிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேத மிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதிகளுடன் இருக்க விடக்கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

உயிர்களுக்கு இதமானதே ஸத்யம்
பொன் மொழிகள் 5


நம் சாஸ்திரங்களில் அவரவருக்கான அனுஷ்டானங்களைச் சொல்வதற்கு முன் ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்கவேண்டிய எட்டு ஆத்ம குணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். இதில் முதலாவதே அஹிம்ஸை தான். ஸத்யம் கூட இதற்குப் பிறகுதான் வருகிறது. அந்த ஸத்யத்துக்கும் இலக்கணம் கொடுக்கும்போது, வெறுமனே நடந்ததை நடந்தபடி வாயால் சொல்வது மட்டுமல்ல; எது ஜீவராசிகளுக்கு இதமானதாக இருக்கிறதோ அதுவே ஸத்யம் என்று சொல்லியிருக்கிறது.

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல்  
பொன் மொழிகள் 4


'அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால், அவரவரும் 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்',
அதாவது, தங்கள் மனதைத் தாங்களே துளி கூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்துகொள்வது
தான் எந்திறார் திருவள்ளுவர்.
கர்மானுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வைதிக
சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.

2/21/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

அன்போடு பணி செய்யவேண்டும்
பொன் மொழிகள் : 3            
        
கருனை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது.
உபகாரம் செய்வதன்மூலம் நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் உண்டாக வேண்டும்.
நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம்.
இந்த 'வேண்டியவர்களை' நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக்கொண்டே
போனால் அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. 'நம் கடன் பணி செய்து கிடப்பதே'
என்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கவேண்டும். கடனை, அதாவது கடமையை 
அன்போடு ஆர்வத்தோடு, இதய பூர்வமாகச் செய்ய வேண்டும்.

2/12/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

அம்பிகையின் தீட்சைகள் 
பொன் மொழிகள் : 2
மீனாட்சி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளைத்தான் கடாக்ஷத்தாலேயே ஞான தீட்சை தந்துவிடும் குருவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இது மத்ஸ்ய தீட்சை. காமாட்சி, பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடுபவள். ஞானகுரு ரூபிணியாகவே
அம்பாளைப் பாவித்துத் திருவடி தீட்சை வேண்டுகிறோம். 


காசியில் இருக்கும் விசாலாட்சி, பக்தர்களை அனுக்ரஹ சிந்தையோடு மனதால் நினைத்தே ஞானமிக்கும் கமட தீட்சை குருவாக இருக்கிறாள்.

2/08/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

பொன் மொழிகள் : 1


'குரு' (ஆசான்) யார் ?  

'குரு' என்றால் கன்மானது. பெரியது. அதாவது பெருமை உடையவர். மஹிமை பொருந்தியவர்
என்று பொறுள். பெரியவர்களை 'மஹாகனம் பொருந்திய' என்று சொல்கிறோம். கனமென்றால்
weight அதிகமென்றா அர்த்தம் ?


ஒருவர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர்
என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர். வெளியிலே நடத்தையால்
வழிகாட்டுவதிலே சிறந்தவர்.


'குரு' என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். குருவுக்கும் சீடனுக்கும் 'லிங்கா'க
உபதேசம் இருக்கிறது. குருவிடமிருந்து புறப்பட்டுப் போய், சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு
மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செலுத்துவது 'தீட்சை' என்று அறியப்ப்டுகிறது.

2/07/2012

கடவுளின் கலக்கம்உலகத்தையே கலங்கடித்த கிருஷ்ண பரமாத்மாவை கலங்க வைத்தான் அந்த பக்தன். அவனது நியாயமான வேண்டுகோளை ஏற்காவிட்டால், தன்னை இனி யாரும் வணங்க மாட்டார்கள் என்ற நிலைமையில் பெருமாள் தத்தளித்தார். வேறு வழியின்றி பெருமாள் அவன் பின்னால் ஏவலன் போல கையில் பாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு சென்றார். பெருமாளின் முன்னால் சென்ற அந்த பக்தர் திருமழிசை ஆழ்வார். அவருக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தவர் பெருமாளை இந்தக் கதிக்கு ஆளாக்கிய கணிகண்ணன். இவர் திருமழிசை ஆழ்வாரின் சீடர். கணிகண்ணன் காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் வரதராஜ பெருமாளின் மீது பாசம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இளைஞராயினும் வேறு எந்த நோக்கமும் இன்றி, பெருமாளின் கைங்கர்யத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். திருமழிசை ஆழ்வாருக்கு தொண்டு செய்பவர். வரதராஜப் பெருமாளே கதியென அங்கேயே கிடந்து சேவை செய்து வந்தார். பெருமாளை வணங்க வருவோருக்கு தேவையான உதவிகள் செய்வார். 

ஒரு ஊரில் கோயில் இருப்பது பெரிய விஷயமல்ல. அந்தக் கோயிலை எந்த அளவு பராமரிக்கிறோம்...சுத்தமாக வைத்திருக்கிறோம் என்பது தான் முக்கியம். கணிகண்ணன் கோயில் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புவார். கோயிலில் ஒரு வயதான அம்மையார் தினமும் கூட்டி, கோலமிட்டு வரும் பணியைச் செய்து வந்தார். இவ்வளவு பெரிய கோயிலை இந்த முதுமைப் பருவத்திலும் அழகாக கூட்டி சுத்தமாக வைத்துக் கொள்கிறார் என்றால், இவர் இளமையாக இருந்தால் இன்னும் சுறுசுறுப்பாக வேலை செய்து, பெருமாளின் இருப்பிடத்தை இன்னும் எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்வார், என்று கருதினார் கணிகண்ணன். அந்த மூதாட்டியை தன் அருகில் அழைத்தார். அம்மா! தாங்கள் தினமும் இங்கு வந்து கோயிலை சுத்தம் செய்து பெருமாளை மகிழ்விக்கிறீர்கள். இந்த முதுமை பருவத்தில் உங்கள் உடல் வலிக்காதா? என்னிடமும் சிறிது நேரம் துடைப்பத்தைக் கொடுங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன் என்றார். மூதாட்டி கணிகண்ணனை தன் மகன் போல் நினைத்து ஆனந்தத்துடன் பார்த்தார். அவரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார். அந்த பாசப்பிணைப்பில் மூழ்கி, மூதாட்டியின் முதுகை தடவிக் கொடுத்தார் கணிகண்ணன்.

என்ன ஆச்சரியம்! மூதாட்டி இளமையே வடிவாக உருமாறினார். கணிகண்ணன் ஆச்சரியப்பட்டார். தான் மனதில் நினைத்ததை பெருமாள் செய்து காட்டி விட்டாரே என ஆனந்தம் கொண்டார். கோயிலுக்கு வந்தவர்களெல்லாம் அந்த இளம்பெண்ணைக் கண்டு அதிசயித்தனர். பெருமாளின் கருணையால் பூமிக்கு வந்த தெய்வமகள் என்றே கருதி மரியாதையுடன் அவளிடம் நடந்து கொண்டனர். அந்த பெண்ணை உருமாற்றிய கணிகண்ணனை போற்றி மகிழ்ந்தனர். இவ்வளவு பெரிய அதிசயம் அரண்மனையை எட்டாமல் இருக்குமா? 

அரசருக்கு இந்தத் தகவல் போனது. மாமன்னன் பல்லவராயன் கணிகண்ணனையும், அந்தப்பெண்ணையும் அவைக்கு அழைத்து வரச் செய்தான். பெருமாளின் பூரண அருள்பெற்ற இருவருக்கும் தக்க மரியாதை செய்தான். அத்துடன் தன் உள்ளத்தில் இருந்த ஆசையையும் சொன்னான். கணிகண்ணரே! உலகில் வயதாகி விட்டால் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. கைகால்கள் நடுங்குகிறது. சாப்பிட முடிவதில்லை. தூக்கம் வருவதில்லை. எனவே வயதாகி விட்ட எனக்கும் நீங்கள் இளமைப் பருவத்தை தர வேண்டும். உங்கள் கை யாருடைய முதுகில்பட்டாலும் அவர்கள் இளமை பருவம் எய்தி விடுவார்களாமே! என்னையும் அவ்வாறு முதுகில் தடவி இளைஞன் ஆக்குங்கள், என்றான். கணிகண்ணன் சிரித்தார். மன்னர் பெருமானே! நீங்கள் சொல்வது போல எந்த வித்தையும் எனக்கு தெரியாது. இந்தப் பெண் அப்படி மாறினால், கோயில் கைங்கர்யத்துக்கு உதவிகரமாக இருப்பாளே என நினைத்தேன். அது நடந்து விட்டது. அதைக் கொண்டு எல்லாரையும் இளைஞர்கள் ஆக்கும் சக்தி என்னிடம் இருப்பதாக கருதாதீர்கள், எனக் கூறினான். அரசன் கெஞ்சாக்குறையாக இதை திரும்பத் திரும்ப சொன்னான்.

 கணிகண்ணனோ தன்னால் அப்படி செய்ய இயலாது என பலமுறை பணிவுடன் சொன்னார். அரசனுக்கு கோபம் வந்து விட்டது. கணிகண்ணா! உன் நோக்கம் எனக்கு தெரிந்து விட்டது. நீ பெண்களை மட்டுமே இளமையாக்கி தவறு செய்யத் துடிக்கிறாய். அதற்காக சித்து வேலைகளைச் செய்கிறாய். அதனால் தான் ஆண்களை இளைஞர்களாக்க மறுக்கிறாய். கடைசியாக சொல்கிறேன். என்னை நீ இளைஞன் ஆக்காவிட்டால், உன்னை. சிறையில் அடைத்து விடுவேன், என்று கர்ஜித்தான். கணிகண்ணன் இதற்கெல்லாம் கலங்கவில்லை. என் அப்பன் நாராயணன் பிறந்ததே சிறைச்சாலையில் தான். அதன் அருமை பெருமையை நானும் அறியவே என்னையும் சிறைக்கு அனுப்புகிறான் போலும்! சிறைக்கு செல்வதில் எனக்கு மகிழ்ச்சி. அதை தெய்வத்தின் இருப்பிடமாகவே கருதுகிறேன், என்று கூறிவிட்டு, காவலர்களிடம் தன்னை சிறைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டார்.

காவலர்கள் அவரை சிறைச்சாலையில் அடைத்தனர். இந்தத் தகவல் கணிகண்ணனின் குருநாதரான திருமழிசை ஆழ்வாரை எட்டியது. அந்த அடியவர் பெரும் சினம் கொண்டார். நேரில் சென்று மன்னனைக் கண்டித்தார். மன்னன் ஆழ்வாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, கணிகண்ணனை விடுவித்தான். ஆனால், தன்னை இளமையாக்க மறுத்த கணிகண்ணன் காஞ்சியை விட்டு சென்று விட வேண்டும் என ஆணையிட்டான். 

திருமழிசை ஆழ்வாருக்கு கோபம் இன்னும் அதிகமானது. என் சீடன் இல்லாத ஊரில் நானும் தங்க மாட்டேன், எனச் சொல்லி விட்டு அவரும் வெளியேறி விட்டார். இதனால் என்ன கேடு நேரப்போகிறதோ என அமைச்சர்களும், அவையோரும் கலங்கினர். அவர்கள் நினைத்ததை விட கொடுமையான சோதனைக் காலம் காஞ்சியை நெருங்கியது. கோபத்துடன் சென்ற ஆழ்வார், வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் சென்றார். 

பெருமாளே! இங்கே உன் பக்தர்கள் படும் அவஸ்தை உன் கண்ணில் படவில்லையா? நீ சயனத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாயே! நீ பக்தர்களைக் காக்கும் உண்மையான தெய்வம் என்றால் உடனே உன் பாம்பு பாயை சுருட்டிக் கொண்டு எங்களுடன் புறப்படு. நாம் வேறு இடத்தில் போய் தங்குவோம், என்றார்  கடுமையாக. பெருமாள் கருவறையிலிருந்து எழுந்தார். எதுவுமே பேசவில்லை. பாம்புப்பாயை சுருட்டினார். கணவனின் பின்னால் லட்சுமியும் புறப்பட்டாள். கணிகண்ணன் முன் செல்ல, ஆழ்வார் பின்தொடர, பெருமாள் பாம்புப்பாயை கையிடுக்கில் இடுக்கிக் கொண்டு அவர்கள் பின் பவ்வியமாய் செல்ல, லட்சமிதேவி தலைகுனிந்து நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் வெளியேறியதும் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவி காஞ்சியில் குடி கொண்டாள். மக்கள் அந்தக்கணமே பெரும் துன்பங்களை அனுபவிக்கத் தொடங்கினர். அரண்மனையில் பிரச்னைகள் உருவாயின.

 நடந்ததை அறிந்து மன்னன் அவர்கள் பின்னால் ஓடினான். ஆழ்வாரிடமும், கணிகண்ணனிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். பெருமாளின் பாதத்தை விடாமல் பற்றிக் கொண்டான். அனைவரும் மனமிரங்கினர். மீண்டும் காஞ்சி வந்தனர். வாழ்வில் கிடைத்தற்கரிய பருவம் இளமைப் பருவம். இந்தப் பருவத்தை இன்பமாய் கழித்தாலும், இறைப்பணிக்கும் சிறிதளவு நேரமாவது ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால், இறைவன் உங்கள் பின்னால் கைகட்டி வருவான்.

2/02/2012

வழிபாட்டு முறை எதுவாக இருந்தாலும், பக்தி அனைவருக்கும் பொதுவானதே* உலகம் பல வண்ணங்களைப் பூசிக் கொண்டிருக்கிறது. வண்ணம் கலைந்த பிறகு எஞ்சியிருப்பது உண்மைப் பொருளான இறைவன் மட்டுமே.


* கடமைகளை ஆன்மிக சிந்தனையோடு செய்தால், ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை
ஏற்பட்டு, உண்மையான பக்தியும், அறிவும் கைகூடும்.


* அறிவுச் சக்தியும், அறிவியல் ஆற்றலும் அதிகமாகி கொண்டிருப்பதால் தான், உலகிற்கு ஆபத்து அதிகமாகி கொண்டிருக்கிறது. பக்தியும், அமைதியும் தான் உலகில் இன்று ஏற்பட்டுள்ள கோளாறுக்கு ஏற்ற மருந்து.


* தூய்மையோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் அங்கு நல்ல முறையில் மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்.


* இறைவனிடம் நாம் பெற்றிருக்கும் மனம், வாக்கு, உடம்பு இவற்றால் செய்யும் செயல்கள் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும். குணத்தாலும், உடலாலும், ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் செயல்களைச் செய்ய வேண்டும்.


- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்